இனிய குரலெடுத்துப் பாடும் உன் பாடலுடன்
வசந்த காலமொன்று என் அடவிகளில் வந்து விழும்

துயரங்கள் நிரம்பித் தாக்கும் வேளைகளில்
வேதனையில் உன் சிரிப்பொலி எழும்போது
அகால இடி முழக்கத்தில் என் வானம் அதிரும்

ஏதோ ஒரு ஆறுதலில் நீ
என் கிளைகளில் தாவிக் குரலெழுப்பும் போது
கார்காலமொன்று எனது வேர்களைச் சூழும்

மரணத்தைப் பற்றியும்
நிலையற்ற வாழ்வின் நியதிகள் பற்றியும்
மகானைப் போல நீ போதிக்கும் தருணங்களில்
கடும் கோடை காலமொன்று என்
கால்களைச் சுற்றி வந்து பெருமூச்செறியும்

ஆனாலும் அன்பே...
இலையுதிர் காலத்தில் விக்கித்து நின்றபோது
ஓராயிரம் இலைகளும் உதிர்ந்து போகையில்
என்னிடம் புன்னகைக்கக் கெஞ்சிய
உன் கீச்சிடலுடன்
பனித்துளிகள் சொரிந்திடலாயின

வாழ்வளித்த நிழலை நின் புலன்களில் தேக்கி
இனிய குஞ்சுடன் தொலை தூரம் பறந்து போகையில்
எனது உயிர்க் குரல் ஓய்ந்து போயிற்று


நீ வாழ்ந்த கூட்டைக் குரங்குகள் பிய்த்தெறிந்தன
நான் மரமென நின்றிருக்கிறேன்:
துயரங்களையும் எதிர்ப்பையும் கூறிட
எனக்கொரு மொழியின்றி...