அவளை உடனடியாக வந்து பார்த்திடுமாறு செய்தி கிடைத்தது:
பதற்றம் நிரம்பியவராய் மக்கள் ஆங்காங்கே குழுமி நின்று
அவள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தியைக்
கதைத்துக் கொண்டிருந்தனர்!

மனிதர்கள் அழுக்கையும் நாற்றத்தையும் மாத்திரமே
விட்டுச் செல்லும் நகரமொன்றில் அந்த வைத்தியசாலையிருந்தது!
தோளுரசிச் செல்லும் வாகனங்களும் நச்சுப் புகை நாற்றமும்
சனக் கூட்டமும் நெரியும் சாலைகளைக் கடந்து செல்லும்
பயணமே ஒரு போர்க்களமாய் விரிந்தது!

விரைவாகச் சென்றடையக் கூடிய
எல்லாச் சந்துகள் கடந்தும் அவற்றின் அசுப காட்சிகள் கடந்தும்
வைத்தியசாலைக்குள் நுழைந்தேன்:
நுழைவாயில் வரை உள்ளிருக்கும் வீச்சம் பரவி
ஆன்மாவைப் பிராண்டியது:
காற்றுமற்ற இடங்களில்
ஈரலிப்பையும் அழுக்கையும் நாற்றத்தையும்
நரக வதைகளாகச் சகித்திருந்தனர் நோயாளிகள்!

சகித்திட முடியாத இடமொன்றை
அவளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதென்ற
நெஞ்சுருகும் பிரார்த்தனையைக் கேட்டுக் கேட்டு
இருண்ட விறாந்தை வளைவுகள் தாண்டித் தேடியழைந்தேன்.

சற்றே தூய்மையான அறையொன்றைக் கடந்த வேளை,
கறுப்பு அங்கியணிந்திருந்த பெண்ணின் அசைவு தெரிந்தது:
அடையாளம் கண்டு கொண்டோம்!

உடலெங்கும் இணைக்கப் பட்டிருந்த குழாய்களுடன்
எழ முயன்றவளைத் தடுத்த போதும்
அனைத்தும் கழன்று விழ
பீறிட்டழும் விம்மலுடன் எழுந்து எனைத் தழுவினாள்!

-உனைச் சிதைத்தவர் யார்?ஆமினாவும் ஆயிஷாவும் எங்கே?-
எனது கேள்விகளுக்கு
ஒவ்வொரு வார்த்தையாக உயிர்கூட்டி உச்சரித்தாள்:
-துப்பாக்கிகளை நீட்டியவாறு குதித்திறங்கிய அவர்களது
வாகனத்திற் சின்னமிருந்தது.
ஆமினாவும் ஆயிஷாவும் துடிதுடித்து வீழ்ந்தனர்.
எனைச் சித்திரவதைப் படுத்திடவென்றே
அனேக ரவைகளைப் பாய்ச்சினர் உடலில்:
அவர்களின் கேள்விகளுக்கு என்னிடம் பதிலில்லை-
எனைச் சல்லடையாக்கிச் சத்தியத்தின் குரலைச்
சாத்தான்களால் பறித்தெடுக்க முடியாது-
சொற்களுக்கு உயிர் கூட்டி முடித்தாள்.

எனைப் பற்றியிருந்த பிடி தளர்ந்தது:
அவள் வசமிருந்த இறுதி வாக்குமூலமும் அழிந்தது!

அந்தக் கனவையும் அதிகாலைத் துயிலையும் உதறி எழுந்தேன்!
மக்கள் சூழ்ந்து நின்றிட அவளை மருத்துவ மனைக்குத்
தூக்கிச் செல்வதை அல் ஜஸீரா காட்டியது!

இறுதி வாக்குமூலத்தை அறிந்திருந்த உலகம்
கொலைகாரர்கள் பெற்றுக் கொண்ட பாராட்டுதல்களையும் பார்த்திருந்தது:
ஏமாற்றப் பட்டோம் அம்மூன்று ஆன்மாக்களும் நானும்!