நிம்மதி குடியிருந்த கிராமத்தின் மீது
வந்து விழுந்தன கோர நகமுடைய கரங்கள்;;:
எங்களைக் குதறிடக் குறி பார்த்தவாறே.....

எமது கல்லூரி வளவினுள்ளே
வன விலங்குகள் ஒளிந்திருக்கவில்லை:
எமது நூலகத்தின் புத்தக அடுக்குகளை
ஓநாய்களும் கழுகுகளும் தம் வாழிடங்களாய்க் கொண்டதில்லை:
நிலாக்கால இரவுகளில் உப்புக் காற்று மேனி தழுவிட
விவாதங்கள் அரங்கேறிடும் கடற்கரை மணற்றிடலில்
பாம்புப் புற்றுகளேதும் இருக்கவில்லை:
மாலைகளில் ஆரவாரம் விண்ணளாவிட எமதிளைஞர்
உதைபந்தையன்றி வேறெதையும் உதைத்ததுமில்லை:
பக்திப் பரவசத்தில் ஊர் திளைக்கும் நாட்களில்
எமதன்னையர்
நிவேதனத்தையன்றி வேறெதனையும்
இருகரமேந்தி ஆலயமேகவுமில்லை!

இங்கெல்லாம்
புரியாத மொழி பேசியவாறு துப்பாக்கி மனிதர்கள்
ஊடுறுவத் தொடங்கிய வேளை விக்கித்துப் போனோம்:
வார்த்தைகள் மறந்தோம்.
எமது கல்லூரி,நூலகம்,கடற்கரை,
விளையாட்டுத்திடல்,ஆலயமெங்கிலும்
அச்சம் விதைக்கப் பட்டு ஆனந்தம் பிடுங்கப் பட்டதை
விழித்துவாரங்களினூடே மௌனமாய்ப் பார்த்திருந்தோம்!

அறிமுகமற்ற பேய் பிசாசுகளையெல்லாம்
அழைத்துக் கொண்டு இரவுகள் வந்தடைந்தன.
எமது வானவெளியை அவசரப்பட்டு அந்தகாரம் ஆக்கிரமித்தது.
அடர்ந்து கிளைவிரித்துக் காற்றைத் துழாவிய படி
எம்மீது பூச்சொறிந்த வேம்பின்
கிளைகள் முறிந்து தொங்கிட அதனிடையே
அட்டுப் பிடித்த கவச வாகனங்கள்
யாரையோ எதிர் கொள்ளக் காத்திருந்தன.

எமதண்ணன்மார் அடிக்கடி காணாமல் போயினர்:
எமது பெண்களில் வாழ்வில்கிரகணம் பிடித்திட
எதிர்காலப் பலாபலன்கள் யாவும் சூனியத்தில்கரைந்தன.

தற்போதெல்லாம் குழந்தைகள் இருளை வெறுத்துவிட்டு
சூரியனைப் பற்றியே அதிகம் கதைக்கிறார்கள்:
அவர் தம் பாடக் கொப்பிகளில் துப்பாக்கிகளை வரைகிறார்கள்:
பூக்களும் பொம்மைகளும் பட்டாம் பூச்சிகளும்
அவர்களைவிட்டும் தூரமாய்ப் போயின:
எங்கள் தேசத்தின் இனிய கதைகளைப் பற்றி
-பாட்டிமார் கதைக்கிறார்கள்:
அந்த வரலாறு இனி எமது ஆனந்தங்களை மீட்டெடுக்கட்டும்!