பிஞ்சுப் பாதங்கள்
செல்லக் கனவுகளின் மீது தத்தி நடந்த வேளை
உனது சாட்டை அடிகளால்
சின்னவளின் கால்களில் பதித்த
இரத்தக் கோடுகளின் மீதிருந்து
உனது குரூரத்தின் பாதையைத் தொடங்கினாய்
அந்தச் சிறுமியின் உலகில்
பிசாசின் உருவெடுத்து உலவலானாய்


அவள் வளர வளர
விஷப் பற்களின் கூர்மையைத் தீட்டியவாறே
அந்தச் சின்னவளின் காலங்களை
அச்சுறுத்துபவனாக நடமாடித் திரிந்தாய்உனது காலடியோசைகளில்
அவளது பாடல்கள் மெளனித்துப் பதுங்கிக் கொண்டன
தீவைத்த மலரெனப் பொசுங்கிவிழும்
அவளது புன்னகையை மிதித்தவாறு
நித்தமும் வலம் வந்தாய்
அவள் ஒளியினைத் தரிசித்த
எல்லா வாசல்களையும்
வாளேந்தியவாறு அறைந்து சாத்தினாய்
மலையென அழுத்தும் இம்சைகளை
அந்த வீடெங்கும் அவிழ்த்து விட்டிருந்தாய்


அவளைக் காப்பாற்றிடவெனப் பொங்கி வந்த
ஒரு காதலின் பிரவாகத்தை
எந்தச் சுவடுமின்றித் தூர்ந்திட வைத்தாய்
நடைப்பிணமானவளை
உனது அரங்குகளிலிருந்து ஓரம்கட்டி
இருளொன்றின் பள்ளத்தாக்கில் அலையவிட்டாய்


அந்தச் சிறுபெண்
உணர்வுபெற்றெழுந்த ஒவ்வொரு வேளையிலும்
உன் கோரப்பற்களால் தீண்டித் தீண்டித்
துடிதுடிக்க விட்டாய்
எக்காலத்திலும் கருணையைச் சிந்தாத கண்களில்
தீயினைக் காவித்திரிந்தாய்

கேள்
நீயாரென்பதை அவளிடம்
அடையாளப் படுத்துவாள்
நாசகாரன்
கொடூரன்
காட்டுமிராண்டி
மன்னிப்பேதுமற்ற மாபாதகனின் வடிவமென


இறைவனே,
இம்முறை உனது வானவர்களை அனுப்பாதே
ஏழு ககனம் விட்டு நீயே இறங்கி வா
உனை வழிபடும் துரதிஷ்டத்தின் புதல்வியை
பேய்களின் தலைவனின் நிழலில்
வதைபட விட்டிருப்பது உனக்குத் தகுமெனில்
தடுப்பதற்கில்லை
எந்த ஆலயத்தை வேண்டுமானாலும் நீ
தரைமட்டமாக்கிப் போகலாம்