நீ திணித்து விட்டுப் போன
துயரத்தின் குழந்தையை
தாங்க முடியாத ஏமாற்றத்தின் பளுவுடன்
தோள் மீது உறங்க வைத்துள்ளேன்
அது துயில் கலைந்து வீரிட்டு அழாதிருந்திட
எப்பொழுதும்
ஆறுதல் மொழிகளற்ற
ஆழமான மெளனத்தை
எனைச் சுற்றி எழுப்பியுள்ளேன்
நான் அழைக்கப் படும்
அரங்குகளில்
எல்லா வரவேற்புக்களோடும்
எனக்கான இருக்கைதனில் அமர்த்தப்படுகிறேன்
பக்குவமாகக்
குழந்தையைத் தோள்மீது சாய்த்தவாறு
தயாரித்து வைத்திருக்கும் வாசகங்களைத்
தணிந்த குரலில் ஒப்புவித்துவிட்டு
ஊர்மெச்சிடும் மகளாகப்
படியிறங்கிப் போகிறேன்
உனைக் கடந்து செல்லும் கணத்தில்
எனது தோளிலிருந்து நழுவும் குழந்தை
உன் மீது
ஒரு கொடி போலப்
படர்ந்திடச் சாயும் வேளை மீண்டும்
அடுத்த தோள்மீது தூங்க வைக்கிறேன்
திரும்பித் திரும்பி
உனையே பார்த்தவாறு தேம்பும் குழந்தையை
எனது கை மாற்றி ஏந்திக் கொள்ளும்
எல்லா உரிமைகளும் உனக்கிருந்தும்
உன் கரங்கள் ஒரு போதும் நீளவும் இல்லை
வேறு எவரிடமும் கொடுத்திட
நான் விரும்பவும் இல்லை
(நன்றி:வடக்குவாசல்)
14 comments:
//எனது கை மாற்றி ஏந்திக் கொள்ளும்
எல்லா உரிமைகளும் உனக்கிருந்தும்
உன் கரங்கள் ஒரு போதும் நீளவும் இல்லை//
வழமை போல் அழகாக, மனசுக்குள் ஏதேதோ உணர்வுகளை தட்டி எழுப்பும்படி எழுதி இருக்கிறீர்கள்.
இது வடக்கு வாசல் இலக்கிய மலரில் பிரசுரமாகியது தான் இல்லையா?அப்போதே படித்துவிட்டேன்..நல்ல கவிதை..
//குழந்தையைத் தோள்மீது சாய்த்தவாறு
தயாரித்து வைத்திருக்கும் வாசகங்களைத்
தணிந்த குரலில் ஒப்புவித்துவிட்டு
ஊர்மெச்சிடும் மகளாகப்
படியிறங்கிப் போகிறேன்//
ரொம்பப் பரிச்சயமான உணர்வு. என்ன அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்!
//திரும்பித் திரும்பி
உனையே பார்த்தவாறு தேம்பும் குழந்தையை
எனது கை மாற்றி ஏந்திக் கொள்ளும்
எல்லா உரிமைகளும் உனக்கிருந்தும்
உன் கரங்கள் ஒரு போதும் நீளவும் இல்லை
வேறு எவரிடமும் கொடுத்திட
நான் விரும்பவும் இல்லை//
உரைக்கும் வரிகள்...உள உறுதியை வெளிப்படுத்தும் வார்த்தைகள்...வாழ்த்துக்கள்.
அன்பின் ஃபஹீமா ஜஹான்,
காலம் ஆற்றொணாத் துயரத்தைக் கைக்குழந்தைக்கு ஒப்பிட்டுக் கவிதையெழுதிய முதல் கவிஞர் நீங்களாகத்தான் இருக்கக்கூடும் சகோதரி.
கவிதை மிக அருமை வழமை போலவே வலியுரைத்தபடி..!
வாருங்கள் saravana kumar
இந்தக் கவிதை குறித்த எனது மதிப்பீடு நன்றாக இல்லாத பொழுதும்
" மனசுக்குள் ஏதேதோ உணர்வுகளை தட்டி எழுப்பும்படி எழுதி இருக்கிறீர்கள்."
இந்த வரிகள் சற்றே திருப்தியைத் தருகிறது.
வாருங்கள் ஸ்ரீராம் பொன்ஸ்
"இது வடக்கு வாசல் இலக்கிய மலரில் பிரசுரமாகியது தான் இல்லையா?"
ஆமாம். அதன் தராதரம் தெரியாமல் அவசரத்தில் எழுதப் பட்ட இந்தக் கவிதையைக் கொடுத்துவிட்டேன்.நேர்த்தியற்ற கவிதையொன்றை வடக்கு வாசல் இதழுக்குக் கொடுத்துவிட்டோம் என்ற வருத்தம் அதன் படைப்பாளிகளின் வரிசையைப் பார்த்தபோது ஏற்பட்டது. நான் வடக்கு வாசல் இதழை இதுவரை பார்க்கவில்லை.
வாருங்கள் கவிநயா
-குழந்தையைத் தோள்மீது சாய்த்தவாறு
தயாரித்து வைத்திருக்கும் வாசகங்களைத்
தணிந்த குரலில் ஒப்புவித்துவிட்டு
ஊர்மெச்சிடும் மகளாகப்
படியிறங்கிப் போகிறேன்-
"ரொம்பப் பரிச்சயமான உணர்வு "
மேலுள்ள வரிகளை ரொம்பவும் சாதாரண வரிகளில் சொல்லாமல் கொஞ்சமேனும் கவிதைவரிகளில் சொல்லியிருக்கமே என்ற குறைபாட்டை உணர்கிறேன்.
வாருங்கள் முகவைத் தமிழன்
//திரும்பித் திரும்பி
உனையே பார்த்தவாறு தேம்பும் குழந்தையை
எனது கை மாற்றி ஏந்திக் கொள்ளும்
எல்லா உரிமைகளும் உனக்கிருந்தும்
உன் கரங்கள் ஒரு போதும் நீளவும் இல்லை
வேறு எவரிடமும் கொடுத்திட
நான் விரும்பவும் இல்லை//
"...உள உறுதியை வெளிப்படுத்தும் வார்த்தைகள்..."
ஹ்ம்.....
சாவு வரைக்கும் சுமந்தலைய வேண்டியதுதான் :(
வாருங்கள் ரிஷான்
"காலம் ஆற்றொணாத் துயரத்தைக் கைக்குழந்தைக்கு ஒப்பிட்டுக் கவிதையெழுதிய முதல் கவிஞர்"
எப்படிச்சொல்வது ?
முன்னரும் எமது வாசிப்புகளுக்கு அப்பால் உள்ள யாராவது எழுதியிருக்கலாம் அல்லவா?
அந்த அளவில் நேர்த்தியற்றதாக(நீங்கள் சொல்வது போல்)எல்லாம் தோன்றவில்லை.அந்த இதழில் எனது கவிதைகளும் பிரசுரமாகியிருக்கின்றன,கவனித்தீர்களா? தொடர்ந்து வடக்கு வாசலுக்கு கவிதைகள் அனுப்பலாமே?
சிறப்பான கவிதை, நன்றி
அன்பின் ஸ்ரீராம் பொன்ஸ்
அந்த இதழை இன்னும் நான் பார்க்கவில்லை. இணையத்தில் பார்த்த பொழுது உங்கள் கவிதை இடம்பெற்றிருப்பதையும் பார்த்தேன். நீங்கள் நன்றாகத் தான் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். எனவே உங்கள் கவிதை சிறப்பாக அமைந்திருக்கும் என்றே எண்ணுகிறேன்.
"தொடர்ந்து வடக்கு வாசலுக்கு கவிதைகள் அனுப்பலாமே?"
நல்லதாக எழுதினால் அனுப்பலாம்.
பார்ப்போம்.
வாருங்கள் கானா பிரபா
வழமைபோலவே உங்கள் வருகையையிட்டு மகிழ்வடைகிறேன்
நன்றி.
Post a Comment