நான் அகன்று போகிறேன்
உனது எல்லாப்
பாசாங்குகளை விட்டும்
பிடிவாதங்களை விட்டும்


வழிகேடு உனது வேதமான பின்னர்
குடிகேடன் உனது தோழனான பின்னர்
என் குரல்
நினது இதயத்தில் ஏறாமல்
நழுவி விழுகிறது


இந்தத் துயர் மிகுந்த நாட்களில்
சகோதரத்துவத்தின் மரியாதையின் மீது
கசந்த நிழலைப் படிய விடுகிறாய்
காப்பாற்றுவதாகச் சொல்லும் உறுதிகளை
வெறிபிடித்த அலைகளிடையே கைவிட்டுள்ளாய்


அன்னையைக் காதலியைக் கடைசியில்
சகோதரியை
அவமானங்களால் போர்த்துகிறாய்
இன்னும் மீதமிருக்கலாம் உன்னிடம்
போர் நிலத்திலிருந்து
பொத்திப் பிடித்துக் கொண்டு வந்த
வாழ்வும் வசந்தங்களும்
இனி அவற்றையும் ஒவ்வொன்றாக
சாத்தானிடம் அடகுவை

மீளவே முடியாத இழிவின் வாசலைத்
தட்டிக் கொண்டிருப்பவனே
இறுதிக் கோரிக்கையையும் நின் பாதங்கள்
நசித்துக் கொண்டு போனபின்னர்
இனி மறுப்பதற்கில்லை
அந்தக் கடப்பாரையை
எனது தலைமீது கைவிட்டவன்
நீதான் என்பதை