முன்பு போல
எதுவித அறிமுகமுமற்றவளாக நான் போய் விடுகிறேன்:
உன் மனதிலெனக்கு
நன்மைகள் கொண்டோ தீடைகள் கொண்டோ
தீர்ப்பெழுதி விடாதே!

உய்த்துணர்வதால் மட்டுமே தெரிந்து கொள்ளத் தக்க
துயரங்களின் வலியை நானுனக்கு
உணர்த்திக் காட்ட முடியாது:
நிகழ்வுகளை விபரித்துச் சொல்வதனால்
சாக்காடாகிப் போன வாழ்வின் வேதனையை
வெளிப்படுத்தவுமேலாது!

உன் மனத்திரையினூடு சட்டமிட்டுப் பார்க்கும்
எல்லைகள் உள்ள வரை
எனது குரலின் நியாயத்தை நீயுணர முடியாது!

அனைத்துப் பூதங்களுக்கும் பயந்தவளாய்
எல்லாக் குற்றச் சாட்டுகளுக்கும் மௌனமாய்த்
தலையசைப்பவளாய்
எதிர்த்துச் சொல்ல எந்த வார்த்தைக்கும் உரிமையற்றவளாய்
தனதினத்தை மாத்திரமே நேசிப்பவளாய்
இருக்க வேண்டுமென எனக்குச் சாசனமேதுமில்லையே...!

உன் கொள்கைகளின் வழியே யாவரும் நடக்கவோ
நீ வெறுப்பவைகளை மற்றவரும் வெறுக்கவோ
அல்லது
வேண்டாம்,உனக்கிவைகளைக் கூற முடியாது
அறிவிலும் ஆற்றல்களிலும் முதன்மையானவன் நீ
அன்றியும் எனது மதிப்பு மிக்கவன்!

உனது உரையாடலின் தொனி
நான் தவறிழைத்து விட்டதென
உணர்த்திப் போவது அறிவாயா?
செய்யாததொன்றுக்காக உன்னெதிரில்
தண்டனை பெற்ற உள்ளமெனது!
நீ அறிந்தவைகளுக்கு அப்பாலுள்ள
கறைபடியாத ஆத்மாவின் கதையெனது!
உன் மனதின் பதிவுகளை மாற்றிக் கொள்வாயாக!

நாளை
எந்தவித அறிமுகமுமற்றவளாக நான் போய் விடுகிறேன்:
உனதுள்ளத்தில்
நன்மைகள் கொண்டோ தீமைகள் கொண்டோ
எனக்குத் தீர்ப்பெழுதி விடாதிருப்பாயாக!

அந்த வயல் வெளி மீது வாழ்வும் மொழியும் வேறுபிரிக்கப் பட்டது
வானமும் திசைகளும் விக்கித்து நின்றிட ,விதியெழுதப் பட்டது!

ஊரெங்கிலும் அச்சம் விதைக்கப் பட்டிருந்த இரவுப் பொழுதும்
வைத்தியசாலையும் மருந்து வாடையும்எனது நினைவை விட்டு
இன்னும் நீங்குவதாயில்லை!
மருத்துவ மனையின் விசாலமான முற்றவெளியெங்கும்
மின் விளக்குகளின் ஒளிக்கற்றைகள் பரவியிருந்தன.
கடலோர மணலும் காய்ந்த புற்களும் கால்களின் கீழே சரசரத்தன
ஆங்காங்கே ஆண்கள் பதற்றத்துடன் நின்றிருக்க.....
இவைதவிர்ந்த காற்று வெளியெங்கும் சோகத்துடன் அமைதி குடியிருந்தது!

தமது பண்பாட்டுச் சுமைகளைச் சூடிநின்ற பெண்கள்
நோயாளர் அறைகளெங்கிலும் நடமாடித் திரிந்தனர்
குசுகுசுத்துக் கதைக்கையில் அவர்தம் முக்காடுகளின் சரிவில் நகைகள் மின்னின.
தற்காலிகச் சவச்சாலையாக மாறிப் போன இடத்தில்-அவை
வெண்ணிறப் போர்வைகளால் மூடி வைக்கப் பட்டிருந்தன:
கண்ணீர் வற்றிப் போன உறவுகள் வெளியே காத்திருக்கக் கூடும்!
தாய்,பிள்ளை,மனைவியென்ற பாசங்கள் வீடுகளில் துடித்திருக்கக் கூடுமங்கே!

இன்று போல் எமது பெண்கள் அல்லாடி வாழ்ந்திடவில்லையன்று:
வயோதிகப் பெற்றோர் தமது புதல்வர்களுக்காக அழுது புலம்பவுமில்லை:
அனாதைகளான சிறுவர்கள் வீதிகளில் அலைந்து திரிந்திடவுமில்லையன்று ...!

மாலைப் பொன்னொளி கவியெழுத வரும் அழகிய வயல் வெளியைச்
சனியன்கள் தம் துயரப் போர்வை கொண்டு மூடின!
மரணப் பீதியுடனான ஓலம் திசைகளை உலுப்பிற்று:
வயல் வெளி கடந்து அவ்வதிர்வு
நீலம் பூத்த மலைகளையும் அடிவானையும் நீண்டு தொட்டது!

அறுவடைக்குச் சென்ற அப்பாவிகள் அறுவடை செய்யப் பட்டனர்:
பின் உழவு இயந்திரப் பெட்டிகளில் நெல் மூடைகளுக்குப் பதிலாகத்
துண்டாடப் பட்ட சடலங்கள் எடுத்துவரப்பட்ட போது எல்லாம் தடுமாறி நின்றன!
இவ்வாறு வன்மமும் வெறுப்பும் வாரியிறைக்கப் பட்ட
வரலாற்றுக் காயம் நிகழ்ந்தது!
எல்லாவற்றையும் வீழ்த்திச் சிதைத்து அள்ளிப் போனது பிரளயத்தின் பெருங் காற்று!


அடைய முடியாத் தொலைவும் நீ
தீண்ட முடியா உறவும் நீ
தொலைவிலிருந்து கேட்கும் இனிய பாடலாக உனது
குரலினை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறேன்.

அசுப தேவதைகள் ஆர் சொல்லை ஆசிர்வதித்தனவோ...
சாபம் போலொரு துயரம் வாழ்வோடு சேர்ந்தது!
என் மீதிருந்த எல்லா உரிமைகளையும் விட்டு நீ
வெகுதூரம்...வெகுதூரம்...போனாய்!
மீட்சியில்லாத் துயரங்களின் முன்
நேசிப்புக்கு இடமில்லாமற்போனது!

அதீத புனைவுகளால் சித்திரிக்கப் பட்டுத்
தோற்றுப் போனது கடந்த காலம்
அனைத்தின் மீதும் கேள்வியெழுப்பி
வாழ விடாமற் செய்துள்ளது நிகழ்காலம்!

யார் யாராலோ விதிக்கப் பட்டதை எனக்கு
ஏற்று வாழும் படியாயிற்று
திணிக்கப் பட்டதை மறுத்ததால் உனக்குத்
தொலைதூரம் போகும் படியாயிற்று
உன்னுலகை விட்டு நானும்
என்னுலகை விட்டு நீயும் தூரமானோம்...
எமக்கிடையே தேச தேசாந்திரங்களும்
கடல்களும் காடு, மலைகளுமாய்...

எனது விதிரேகையும் ஆயுள் ரேகையும்
அனர்த்தங்கள் குறித்து ஆரூடம் சொல்லிக் கொண்டிருந்ததை
தாமதமாகவே அறிந்து கொண்டேன்.

மரணத்தின் தூதுவர்கள் அலைகின்ற
அதிவேகத் தெருக்களில் நீ சென்றுகொண்டிருந்தாலும்
சற்றே ஒதுங்கி நின்று
எனக்கொரு அழைப்புத் தருவாயா?
தங்க எங்கும் இடமற்று நீ வாழும் தேசம் வரை
நீண்டு நீண்டு வருகின்றன என் கனவுகள்!


சின்னஞ் சிறு வெண் சிறகிரண்டிலும்
புழுதி படியலாயிற்று:
பஞ்சு போன்ற அதன் உடலம்
ஒடுங்கிச் சிறுத்திற்று:
கூடி விளையாடிய அவளது பாதம்
தவறுதலாகக் குஞ்சின் தலை மீதேறியது:
கால்களும் உடலும் நெடுநேரம் நடுங்கிடச் சிறுமி
தனது பிரியம் துடிப்பதைப் பார்த்திருந்தாள்!

கரு முகிலே! உன் துளிகள் தூவி
அதன் மேனிக்கு வலுவூட்டு!
நீல விசும்பே!உன் குரல் கொண்டு
மீளாத் துயிலிலிருந்து அதையெழுப்பு!
வீசும் பவனமே!உனது மென் கரங்களால்
மூடிய இரு கண் மூடிகளைத் திறந்து விடு!
இனிய குஞ்சே ! வலிகளைக் காலடியில் விட்டு
குணமடைந்து எழுந்து விடு:
முறையிட்டாள் சிறுமி ஆகாயம் நோக்கி.

உயிர் பிழைத்த குங்சு
ஒரு கண் பார்வையிழந்து தவித்தது!
இடையில் தவறிய வழி தேடிக் கீச்சிட்டவாறு
எங்கோ எங்கோ பார்த்திருந்தது


மரணத்தின் நிழல் அதன் தலைக்கு மேலே
கவிழ்திருந்த காலைப் பொழுதில்
கடும் பிரயத்தனத்துடன் ஒரு சொண்டுத் தண்ணீரை
அண்ணாந்து குடித்தது
உலகில் அதற்கென ஆண்டவன் வைத்திருந்த
கடைசி நீர்த் துளி அது!

குஞ்சுடன் முன்னும் பின்னும் அலைந்து
சுpறுமியின் பார்வைக்குத் தப்பித் திரிந்த மரணம்
முதலில் அதன் சின்னஞ் சிறு சிறகிரண்டிலும் வந்தமர்ந்தது:
சிறகுகள் கீழே தொங்கிட மெல்ல மெல்ல நகர்ந்தது குஞ்சு:
அந்திப் பொழுதில் சாவு அதன் கழுத்தின் மீதேறி நின்றது:
ஒரு மூதாட்டி போலச் சிறகு போர்த்தி
அசைவற்றுப் படுத்தது குஞ்சு!

இரவு நெடு நேரம் வரை காத்திருந்த மரணத்தின் கரங்கள்
சிறுமி தூங்கிய பின்னர்
துண்டு நிலவும் மறைந்து வானம் இருண்ட பொழுதில்
அந்தச் சிறு உயிரைப் பறித்துப் போயிற்று!


சாபங்களையகற்றிய குழிகளின் மீதிருந்து
காற்றிலே கரைகிறது சூனியம்!


அவர்களும் விதைத்தனர்
இவர்களும் விதைத்தனர்:
எந்தப் பாதமொன்றோ தம் மீது படும் வரை
உருமலை உள்ளடக்கிக்
காலங்கள்தொறுமவை காத்துக்கிடந்தன!


தத்தித் தவழும் பாலகனோ...
ஏழைத் தாயொருத்தியோ...
இனிய இளைஞnihருவனோ...
மதகுருவோ...
மேய்ச்சலுக்குச் சென்ற மந்தையொன்றோ...
அல்லது
குறிவைத்த அவர்களிலும் இவர்களிலும் எவரோ?


அறுவடை காண மறந்த வன்னிப் பெரு நிலத்தில்
நச்சுக் கிழங்குகளை நாளெல்லாம் தோண்டலாம்:
நீண்ட கோடைகளிலும் மரிப்பதில்லை
மாரி காலம் கடந்து போன பின்னும் முளைப்பதில்லை:
ஏவி விடப் பட்ட பூதங்களைத் தமக்குள் பிடித்து
பாதையோரங்களிலும் பொட்டல் வெளிகளிலும் காத்திருந்தன!


நெஞ்சிலுள்ள செஞ்சிலுவை அவனைக் காத்திட
தன் கரம் சுமந்த கோலுடன்
அங்குலமங்குலமாக
வன்னிப் பெரு நிலம் தடவி நச்சுக் கிழங்குகள் தோண்டுகிறான்!


எங்கிருந்தோ வந்த தேவ தூதனாய்
எம்மொழியும் அறியான்...எமதினமும் அறியான்...
அவனொருவன் சாபங்களைத் தோண்டியகற்றிய குழிகளில்
நாமினி எதை நடப் போகிறோம்?


அவளைப் பலவீனப் படுத்த
எல்லா வியூகங்களையும் வகுத்த பின்பும்
அவளை உள் நிறுத்தி எதற்காக
இன்னுமின்னும் வேலிகளை எழுப்புகிறாய்?

போரிலும் பகையிலும் முதல் பொருளாய்
அவளையே சூறையாடினாய்:
அவளுக்கே துயரிழைத்தாய:;
உன்னால் அனாதைகளாக்கப் பட்ட
குழந்தைகளையெல்லாம் அவளிடமே ஒப்படைத்தாய்:
தலைவனாகவும் தேவனாகவும் நீ
தலை நிமிர்ந்து நடந்தாய்

எல்லா இருள்களின் மறைவிலும்
நீயே மறைந்திருந்தாய்:
ஒளியின் முதல் கிரணத்தையும்
உன் முகத்திலேயே வாங்கிக் கொண்டாய்!

உனதடி பணிந்து தொழுவதில் அவளுக்கு
ஈடேற்றம் கிடைக்குமென்றாய்:
கலாசாரம்,பண்பாடு எனும் அரிகண்டங்களை
அவளது கழுத்தில் கௌரவமாய்ச் சூடினாய்

உனது மயக்கங்களில்
தென்றல்,மலர்,இசை...
தேவதை அம்சங்களென...
அவளிடம் கண்டவையெல்லாம் பின்னர்
மாயைகளெனப் புலம்பவும் தொடங்கினாய்

அவளிடமிருந்த அனைத்தையும் பறித்துக் கொண்டு
சிகரங்களில் ஏறி நின்றாய்
பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு காணச் சொன்னது
உனக்கு மட்டுமென எப்படிக் கொண்டாய்?


நட்சத்திரங்கள் பூத்த வானம் விரிந்திருந்தது!
எமக்குப் பின்னால்
பாதியாய் ஒளிர்ந்த நிலவு தொடர்ந்து வந்தது!
தூரத்து வயல் வெளியை மூடியிருந்தது
வெண்பனி
தென்னைகளில் மோதி குடியிருப்புகளை ஊடுருவி
எம் செவி வழி நுழைந்தது
வங்கக் கடலில் எழுகின்ற அலையோசை !
சந்தடி ஓய்ந்த தெரு வழியே
நீயும் நானும் விடுதிவரை நடந்தோம் !

இப்படியே
எத்தனையோ இரவுகளில்
விவாதிப்போம் நெடு நேரம்
முடிவில் ,எதிர்காலம் குறித்த அவநம்பிக்கைகளுடன்
பிரிந்து செல்வோம் !

பின் வந்த, பதற்றமான பொழுதொன்றில்
உன் விடுதலை வேட்கைக்குத் தடையாயிருந்த
அனைத்தையும் உதறி அடவி புகுந்தாய் !

பரணி...
உன் நினைவுகள் தேய்ந்து கொண்டிருந்த வேளை
மாரி கால அந்திப் பொழுதொன்றில்
நனைந்த சீருடைகளில் இருந்து நீர் சொட்டச் சொட்ட
மீளவும் நீ வந்தாய் !

அலையெழும்பும் கடல் பரப்பினில்
உனக்கான பணி முடிக்கவென விடைபெற்றுப் போனாய்:
வாழ்த்துச் சொல்ல வாயெழவுமில்லை!
ஆரத்தழுவிட நீ விரும்பவுமில்லை !
வெளியே பெய்த மழை என் கன்னங்களில் வழிந்தோட...
மழைப் புகாரினூடே மறைந்து போனாய் !

திரைகடல் சென்ற திரவியமானாய் !
ஆழிப்பரப்பெங்கும் ஊழித்தீ எழுந்து தணிந்தது-நீ
திரும்பி வரவே இல்லை !

இன்று வீரர்கள் துயிலும் சமாதிகள் மீது
காலத்துயரின் பெரு மௌனம் கவிழ்ந்துள்ளது !
சமுத்திரத்தையே சமாதியாகக் கொண்டவனே !
இங்கு ஏதுமற்ற உன் கல்லறையில்
ஒரு கடல் நீரூற்றி நிரப்பிடவோ?


உனது மகிழ்ச்சிகளையெல்லாம்
என்னிடமிருந்தே பெற்றுக் கொண்டாய்:
எனது துயரங்களையெல்லாம்
நீயன்றோ ஏற்படுத்தித் தந்தாய்?
தாங்க முடியா வலி தருகின்ற உன் தளைகளிலிருந்து
என்னை விட்டுவிடேன்-போகிறேன்!

எவருக்கும் புலப்படாத வெளிகளில் அலைந்து
ஏதோ ஒரு கடற் காற்றை என்னோடு எடுத்து வந்து
நாறிப் போன காற்று வெளியில் பதிலீடு செய்ய வேண்டும்!

கடந்த காலம் தந்த சொற்களை
வரி வரியாக விதைப்பது அலுத்துவிட்டது!
அடிச்சுவடுகளெல்லாம்
மிகுந்த துயரங்களைத் தேக்கிவைத்து
நான் மிதிக்கும் வேளை
பழங்காலத்துப் பாசி படிந்த நீரை
என் மீது வாரியிறைக்கின்றன!

எனைச் சூழ்ந்த பெருவெளியெங்கும்
நிரம்பித் தாக்கும் பேரிரைச்சல்
சகித்து வாழ முடியாச் செய்திகளைத் தருகின்றன:
நீ தந்த சிதைவுகளிலிருந்து தானே மீள
நான் உயிர்த்து வர வேண்டும்!

யாரை உதறி எறிந்து
யார் வெளியேறுவது?
வடபுலம் நான் தென் திசை நீ என்ற
நமதெல்லைகளைக் களைந்து
ஆண்டாண்டுகளாகச் சிக்கிவாழும்
பிம்பங்களிலிருந்து மெய்யன்பை
வெளிக் கொணர்வோம்!

உனது அதிகாரங்களையும்
எனது அண்டி வாழ்தலையும்
கீழிறக்கி வைத்துவிடுவது
சாத்தியப் படுமெனில் ஒன்று சேர்வோம்!

நீ அவனைக் காதலித்தாயா? எனத்
தொலை புலத்திலிருந்து கேட்கும்
அண்ணனுக்கு
நாளை பதில் எழுதுவேன்!

Powered by Blogger.

தொகுப்புகள்

தொகுப்புகள்


About Me

My Photo
ஃபஹீமாஜஹான்
View my complete profile

Search

About