சூரியன் தனது வெக்கை மிகு கதிர்களால்
இலைகளை வீழ்த்திக் கொண்டிருந்த
மரமொன்றில் வந்தமர்ந்தது
பிரளயத்திலிருந்து தப்பித்து வந்த பறவை
கனிகளோ வித்துக்களோ இன்றி
ஒரு சத்திரம் போல
நின்றிருந்த மரத்திடம்
சின்னஞ்சிறு பறவைக்குக் கொடுத்திட
எதுவுமே இருக்கவில்லை
குருவி குந்தியிருந்த மரத்தின் கீழே
வீழ்ந்து கிடந்தது
இற்றுப் போன ஒரு நிழல்
தொலை தூர ஆற்றுப் படுகையில்
மறைந்து கொண்டிருந்தது கடைசிச் சூரியன்
அசைந்து வரும் கரிய யானைகளைப்
பார்த்தவாறு
கைவிடப்பட்ட தனது கூட்டை எண்ணிக்
கண்ணீர் உகுத்திடலாயிற்று
அடைகாத்த முட்டைகளைப்
பெருங்காற்றில் போட்டுடைத்த கரங்களில்
எல்லா அதிகாரங்களும் இருந்தது
“ஏன் செய்தாய்” எனக் கேட்க முடியாத
அடக்கு முறையில் காலம் சிக்கியிருந்தது
குருவியை உறங்க வைத்திட முடியாமல்
கிளைகளினூடே
பதுங்கிப் பதுங்கி அசைந்து கொண்டிருந்தது
இருண்ட இரவு
உள்ளேயொரு சூனியத்தை வைத்து
உயிர் வேலியொன்றைச் சுமந்தவாறு
முடிவற்ற இருளொன்றினூடாக
அந்தச் சிறு பறவை
பறந்து போயிற்று
16 comments:
கூடுடைத்த கடும் சூரைக் காற்று,
மறைப்புகளுக்குக் கூட இலைகளற்ற சூனிய மரம்,
இருளைக் கொண்டுவரும் காலம்.
எல்லாமும் சேர்ந்து குருவியின் வாழ்வுக்கும் மகிழ்வுக்கும் எதிராக இருப்பினும், ஏதோ ஒரு நம்பிக்கையில்
//உள்ளேயொரு சூனியத்தை வைத்து
உயிர் வேலியொன்றைச் சுமந்தவாறு
முடிவற்ற இருளொன்றினூடாக
அந்தச் சிறு பறவை
பறந்து போயிற்று//
குருவிக்கென அழகிய கூடு நிச்சயம் இவ்வுலகில் இருக்கும். சூறாவளிக்கும் அசையாத செறிவான விருட்சங்களோடு இருக்கும் அந்த அடர் வனத்தின் அழகிய மரங்கள் பட்டுப் போயிருக்காது. இருளினூடு நிலவும் ஒளிரும். குருவிக்கு நிம்மதியான வாழ்வு கூடவே வரும்.
வரட்டும் !
மிக அருமையான, அழகிய கவிதை சகோதரி !
மிக அருமையான கவிதை..
எல்லாம் வல்ல ஏக இறைவன் எல்லாவள நலன்களும் தங்களுக்கு
தந்தருள்வானாக....ஆமீன்.
மிக அருமையான, அழகிய கவிதை சகோதரி !
வாருங்கள் ரிஷான்,
"எல்லாமும் சேர்ந்து குருவியின் வாழ்வுக்கும் மகிழ்வுக்கும் எதிராக இருப்பினும், ஏதோ ஒரு நம்பிக்கையில்"
எதுவுமே இல்லாமற் போனபின்னர் வைத்திருக்கக் கிடைப்பது நம்பிக்கை ஒன்று மட்டும் தானே!
நன்றி தம்பி.
வாருங்கள் ஸ்ரீராம் பொன்ஸ்,
உங்கள் வருகைக்கு நன்றி.
வாருங்கள் சங்கர்,
உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது.
நன்றி.
வாருங்கள் nidurali ,
முதற் தடவையாகத் தாங்கள் வந்திருக்கிறீர்கள்.
உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது.
நன்றி.
http://www.psminaiyam.com/
கவிதைகள் அருமையாய் இருக்கின்றன.தங்களது ’எல்லைக் கோட்டில் தடுக்கப் பட்டவள்’ கவிதையை பூக்களில் இருந்து சில புத்தகங்களுக்கு (http://mathavaraj.blogspot.com/2009/09/blog-post_09.html) பயன்படுத்தலாமா?
தங்கள் இ மெயில் முகவரி தர இயலுமானால் மிக்க நன்றி.
வாருங்கள் மாதவராஜ்,
தங்கள் மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பியுள்ளேன்.
தங்கள் வருகைக்கு நன்றி.
காத்திரமான படைப்பு. நல்வாழ்த்துக்கள்!
வாருங்கள் மாத்தளை ரியாஸ்,
முதல் முறையாக வந்திருக்கிறீர்கள் உங்கள் வருகைக்கு நன்றி.
Realy, Fantastic poem Sister Faheema Jahan
I enjoyed a lot through your nice creation in tamil.
My heartiest congratulation to you
Keep it up.
Iniyavan Isarudeen
email: isarudeen@gmail.com
வாருங்கள் இனியவன் இசார்தீன்,
கிழக்கிலிருந்து நான் வந்ததன் பின்னர் முதன் முறையாக இப்போது தான் உங்களை இதனூடாகக் காண்கிறேன்.
உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது.
நன்றி.
குருவியின் உருவகம் ஈழ தழிழர்களின் நிலையையே உணர்த்துகின்றன. அதிகாரத்தின் பலமும் சமானிய மனிதர்களின் பலகினமும் கவிதை நயத்தோடு அழகாய் கூறியிருக்கீர்கள்
சூனியம் என்பது மாயை
நிரந்தரம் மற்றது
ஒரு விடியலின் துடக்கம்
நீண்ட இரவின் முடிவு
நிலையில்லா இந்த உலகில்
எதுவும் நிரந்தரமில்லை
எது நிரந்தரம்
புரிதல் வந்துவிட்டால்
துயரம் நிரந்தரமில்லை
நம்பிக்கையுடன் காத்திருங்கள்
விடியல் வெகுதுரத்தில் இல்லை....
வாழ்த்துக்கள்!
Post a Comment