உனது முக வசீகரத்தைத்
துலக்கித் துலக்கித்
தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது
காலத்தின் அற்புதக் கரங்கள்


உனது சொற்களைப் பற்றியவாறு
வீடெங்கும் படர்கிறது
பாசத்தில் வேர் ஊன்றிய கொடியொன்று


அத்தனை இனிமையான
அவ்வளவு ஆனந்தமான
அந்த மாலைப் பொழுதிலிருந்து
மெல்லத் துளிர்விட்டது
எப்பொழுதும் வாடாத ஒரு பூ


மரணம் இயன்றவரை பந்தாடிக்
கை விட்டுச் சென்ற
பாலை நிலத்திலிருந்து
ஒளிர்விடும் முத்தெனத் திரும்பி வந்திருந்தாய்
எமைப் பரிதவிக்க விட்ட
காலத்தின் கண்ணீரைத் துடைத்தவாறு
நிகரிலா ஆவலுடன்
நேத்திரங்களில் நிறைந்தாய்


எவரும் வந்து போய்விடக்கூடிய
முடிவற்ற தெருவினூடாக
எவராலும் எடுத்துவரமுடியாத
ஆனந்ததை ஒப்படைத்த பெருமிதத்துடன்
விடைபெறத் தயாரானாய்


உன்னிடம் காண்பித்திட
ஒரு வெளி நிறைந்த காட்சிகள் இருந்தன
அவசர மனிதர்களும்
மாலைப் பொழுதும்
எமைக் கடந்து போய்க் கொண்டிருந்த
வீதியிலே நடந்தோம்


பெரு மழைக் காலத்தை எதிர்பார்த்து
தூரத்து வ்யல் வெளிகளில்
எரிந்து கொண்டிருந்தது தீ
மூங்கில்கள் தலைகுனிந்து
எதனையோ உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும்
அடர்ந்த மரங்களின் கீழே
ஓடிக் கொண்டிருந்தது ஆறு
கொடிகளை இழுத்து அசைத்தவாறு


நீலம் பூத்த மலைகளும் தென்னந்தோப்புகளும்
கரையத் தொடங்கிய இருளில்
எம்மீது படிந்து கொண்டிருந்தது
ஏதோவோர் ஒளி
ஆகாயத்தின் கிழக்கே
உன்னைப் போலவே ஒரு நட்சத்திரம்
மின்னத் தொடங்கியிருந்தது


நின்று இரசித்திட யாருக்கும் நேரமற்ற
அந்த அஸ்தமனத்தின் மெல்லிய ஒளியினூடாக
தெருமுனைவில் வழிபார்த்திருந்த
அம்மாவிடம் மீண்டோம்


இருளானதும் கூடு செல்லத் துடிக்கும்
பறவையின் சிறகுகளோடு உந்திப் பறந்தாய்
பரிமாறப்படாத இரவுணவையும்
தந்துசென்ற அன்பின் பரிசுகளையும்
எங்கள் உள்ளங்களில் சுமக்கவிட்டு

(2009.09.27 இன் நினைவாக)