அடுத்தவர்தமை ஆறுதல் படுத்திடத் தானே
அன்பினைப் பகர்ந்திடாது அகன்று சென்றேன்
மீறிப் போய்விடாதிருந்திடப் பண்பாடுகள்
மெளனத்தின் விலங்குகளால் எனைப்
பிணைத்திருந்தேன்


அன்பு ததும்பிக் கிடந்த உனதழகிய
விழிகளில் பதிந்திடா வண்ணம்
பிடிவாதத்துடன் கண்களைத் திருப்பிக் கொண்டேன்
வந்தனங்களும் புன்சிரிப்பும்
உன்னெதிரே வராமல்
இறுகிய முகக் கோலத்தை எனதாக்கிக் கொண்டேன்
உனது நிழல் மீது எனது நிழல் வீழ்ந்து பின்னிடும்
அருகாமையால் வேகமாகக் கடந்து போனேன்
பிரியாவிடைபெற்றுப் புன்னகையுடன் பிரிந்த நாளில்
பகிர்ந்திடாத அன்பின் பளுவினைச் சுமந்து போனேன்

ஆனாலும்
கல்லூரி முன்றலிலும்
அதி வேகத் தெரு முனைவினிலும்
அந்தி மஞ்சள் கிரணங்கள்
முகத்தின் கண்ணாடி வில்லைகளிலும்
சொகுசு வாகனத்திலும் பளிச்சிட்டுச் சிதறிட
ராசா போல எதிரே வந்து
வேகம் குறைத்து நீ தடுமாறித் தவித்த
நகரத்தின் மத்தியிலுமாய்
எதிர்பாராத் தருணத்தில்
எதிர் கொண்ட உன் விழிகள் மாத்திரம்
எனை உற்றுப் பார்த்தவாறே கிடக்கின்றன
இன்னும்

திரும்பத் திரும்பப் பார்த்து
எடுத்துச் செல்லாமலே விட்டுச் சென்ற
உனது பார்வைகள்
உயிரோயும் வரைக்கும் உள்ளொளி பாய்ச்சிடுமோ?
உயிரோயும் வரைக்கும் உயிரினைத் தீய்த்திடுமோ?


************************
20051223