பிஞ்சுப் பாதங்கள்
செல்லக் கனவுகளின் மீது தத்தி நடந்த வேளை
உனது சாட்டை அடிகளால்
சின்னவளின் கால்களில் பதித்த
இரத்தக் கோடுகளின் மீதிருந்து
உனது குரூரத்தின் பாதையைத் தொடங்கினாய்
அந்தச் சிறுமியின் உலகில்
பிசாசின் உருவெடுத்து உலவலானாய்


அவள் வளர வளர
விஷப் பற்களின் கூர்மையைத் தீட்டியவாறே
அந்தச் சின்னவளின் காலங்களை
அச்சுறுத்துபவனாக நடமாடித் திரிந்தாய்



உனது காலடியோசைகளில்
அவளது பாடல்கள் மெளனித்துப் பதுங்கிக் கொண்டன
தீவைத்த மலரெனப் பொசுங்கிவிழும்
அவளது புன்னகையை மிதித்தவாறு
நித்தமும் வலம் வந்தாய்
அவள் ஒளியினைத் தரிசித்த
எல்லா வாசல்களையும்
வாளேந்தியவாறு அறைந்து சாத்தினாய்
மலையென அழுத்தும் இம்சைகளை
அந்த வீடெங்கும் அவிழ்த்து விட்டிருந்தாய்


அவளைக் காப்பாற்றிடவெனப் பொங்கி வந்த
ஒரு காதலின் பிரவாகத்தை
எந்தச் சுவடுமின்றித் தூர்ந்திட வைத்தாய்
நடைப்பிணமானவளை
உனது அரங்குகளிலிருந்து ஓரம்கட்டி
இருளொன்றின் பள்ளத்தாக்கில் அலையவிட்டாய்


அந்தச் சிறுபெண்
உணர்வுபெற்றெழுந்த ஒவ்வொரு வேளையிலும்
உன் கோரப்பற்களால் தீண்டித் தீண்டித்
துடிதுடிக்க விட்டாய்
எக்காலத்திலும் கருணையைச் சிந்தாத கண்களில்
தீயினைக் காவித்திரிந்தாய்

கேள்
நீயாரென்பதை அவளிடம்
அடையாளப் படுத்துவாள்
நாசகாரன்
கொடூரன்
காட்டுமிராண்டி
மன்னிப்பேதுமற்ற மாபாதகனின் வடிவமென


இறைவனே,
இம்முறை உனது வானவர்களை அனுப்பாதே
ஏழு ககனம் விட்டு நீயே இறங்கி வா
உனை வழிபடும் துரதிஷ்டத்தின் புதல்வியை
பேய்களின் தலைவனின் நிழலில்
வதைபட விட்டிருப்பது உனக்குத் தகுமெனில்
தடுப்பதற்கில்லை
எந்த ஆலயத்தை வேண்டுமானாலும் நீ
தரைமட்டமாக்கிப் போகலாம்





நான் அகன்று போகிறேன்
உனது எல்லாப்
பாசாங்குகளை விட்டும்
பிடிவாதங்களை விட்டும்


வழிகேடு உனது வேதமான பின்னர்
குடிகேடன் உனது தோழனான பின்னர்
என் குரல்
நினது இதயத்தில் ஏறாமல்
நழுவி விழுகிறது


இந்தத் துயர் மிகுந்த நாட்களில்
சகோதரத்துவத்தின் மரியாதையின் மீது
கசந்த நிழலைப் படிய விடுகிறாய்
காப்பாற்றுவதாகச் சொல்லும் உறுதிகளை
வெறிபிடித்த அலைகளிடையே கைவிட்டுள்ளாய்


அன்னையைக் காதலியைக் கடைசியில்
சகோதரியை
அவமானங்களால் போர்த்துகிறாய்
இன்னும் மீதமிருக்கலாம் உன்னிடம்
போர் நிலத்திலிருந்து
பொத்திப் பிடித்துக் கொண்டு வந்த
வாழ்வும் வசந்தங்களும்
இனி அவற்றையும் ஒவ்வொன்றாக
சாத்தானிடம் அடகுவை

மீளவே முடியாத இழிவின் வாசலைத்
தட்டிக் கொண்டிருப்பவனே
இறுதிக் கோரிக்கையையும் நின் பாதங்கள்
நசித்துக் கொண்டு போனபின்னர்
இனி மறுப்பதற்கில்லை
அந்தக் கடப்பாரையை
எனது தலைமீது கைவிட்டவன்
நீதான் என்பதை

அடவி 2007




தீ மூட்டப் பட்ட
வனத்தைவிட்டுத்
தப்பித்துப் பறக்கிறது
பறவை

சிங்கத்தோடு நரிகளும்
புலியோடு ஓநாய்களும்
அணிதிரண்ட அடவியில்
அபயம் தேடியலைகிறது
மான் குட்டி

வற்றிய குளத்தில்
வந்திறங்கிய கொக்குகள்
நீர் ததும்பும் நதிகளில்
சேர்ப்பிக்கும் கதைகள் பேசி
மீன்களைக் காவிப்
பறக்கின்றன மலையுச்சிக்கு

தேனீக்களை விரட்டியடித்துத்
தேன் சொட்டும் வதையை
அபகரித்துக் கொண்டது
கரடி

அடவியெங்கும்
அதிர்ந்து ஒலிக்கிறது
என் தேசத்து
மானுடத்தின் பேரவலம்