இலக்கற்றுப் பறந்து கொண்டிருந்த
சிறு பறவை
விதியின் சுவரொன்றினருகே
வட்டமிட்ட பொழுது
யாருக்காவோ காத்திருந்த தளவாடியில்
சிறகடிக்கும் தனது துரதிஷ்டத்தின்
விம்பத்தைக் கண்ணுற்றது
பாவனை காட்டுமந்தக் கண்ணியில்
உள்ளம் சிக்கிவிட
உள்ளிருக்கும் அபூர்வத்தின்
ஸ்பரிசத்தைப் பெற முயன்ற தருணங்களிலெல்லாம்
வலிமை மிகுந்த தடையொன்றில்
மோதி மோதி விழுந்தது
அந்த வீட்டின்
கருணையற்ற காலடியோசைகள்
நெருங்கி ஒலிக்கத் தொடங்கும் பொழுதெலாம்
கண்ணாடிக்குள் உறவைக்
கைவிட்டுவிட்டுக்
காற்று வெளிக்குள் தெறித்து மறைந்தது
வசீகரிக்கும் நடனங்களையும்
உயிருருகும் பாடல்களையும்
ஒப்புவித்த பின்னரும்
உள்ளிருக்கும் உலகைத் தாண்டி
மாயப் பறவை வாராமற் போகவே
அதன் பார்வையில் படுமாறு
கூடொன்றைக் கட்டிமுடித்திடச்
சவால்மிகுந்த வனாந்தரங்களில் அலைந்து
சிறு துரும்புகளைக் காவி வந்தது
விரித்துத் திரிந்த சிறகுகளை ஒடுக்கித்
தன் சிறு கூட்டுள் வைத்தவாறு
இருள் தேங்கியிருக்கும் கண்ணாடியைப் பார்த்தவாறு
இரவுகள் தோறும் பயந்தவாறிருந்தது
ஒரு விடியலில்
அனைத்தையும் இடமாற்றிக் கொண்டிருந்த வீட்டின்
அதிகாரமிக்க கையொன்றிலிருந்து
குருவியின் விம்ப உலகம்
நழுவிச் சிதறியது.
ஏதுமறியாதது
சுவர் தின்ற தன் இணையைத் தேடி
அந்த இடமெலாம் கதறிப் பறந்தது
இன்று
எல்லாப் பறவைகளும்
விடைபெற்றுப் போய்விட்ட
வனமொன்றைச் சரணடைந்த குருவி
சுவரில் புதையுண்ட தனது விம்பத்தை
மீட்டெடுத்து வர முடியாமற் போன
சாபத்தை எண்ணி அழுகிறது
15 comments:
//இன்று
எல்லாப் பறவைகளும்
விடைபெற்றுப் போய்விட்ட
வனமொன்றைச் சரணடைந்த குருவி
சுவரில் புதையுண்ட தனது விம்பத்தை
மீட்டெடுத்து வர முடியாமற் போன
சாபத்தை எண்ணி அழுகிறது//
புதையுன்டது தனது விம்பமென்று தெரிந்த பின்பும் அதை சாபமென எண்ணி குருவி அழுவது ஏன்?
அன்பின் பஹீமாஜஹான்,
கண்ணாடி விம்பத்துடன் சேர்ந்து வாழக் கூடு கட்டிக் கனவுகள் நொறுங்கிய பறவையின் சோகம் உங்கள் வரிகளில் மிகவும் வலிமையாகத் தாக்குகின்றன.
அருமையான கவிதை சகோதரி..!
இப்ப போயிட்டு அப்பால வரேன்!
//பாவனை காட்டுமந்தக் கண்ணியில்
உள்ளம் சிக்கிவிட
உள்ளிருக்கும் அபூர்வத்தின்
ஸ்பரிசத்தைப் பெற முயன்ற தருணங்களிலெல்லாம்//
இப்படித்தான் எல்லோரும் எதெதிலோ சிக்கிக் கொண்டிருக்கிறோம்.. விம்பங்களை நிஜமென்று எண்ணி ஏங்கி அழுது கொண்டிருக்கிறோம்..
அருமையான உருவகக் கவிதை பஹீமா.
அன்புத்தோழி கவிதை புரிகிறது.. கூடவே வலியும்..
வணக்கம் தோழி,
வலி மிகுந்த உங்கள் கவிதைகள் அனைத்தையும் பொறுமையாக இப்போதுதான் வாசித்தேன். என் இதயம் துழைத்து முதுகு வழியாக வருகிறது ஒவ்வொரு கவிதையும். கவிதைகளை படிக்கும்போது கண்முன் விரியும் காட்சிகளை என்னால் இங்கு விவரிக்க முடியவில்லை.
தம்பிக்கு எழுதிய கவிதை படித்து கண்ணீர் வடித்தேன். எல்லாவற்றையும் அனுபவங்கள் சொல்கிற கவிதையாகவே பார்க்கிறேன்.
சமீபத்தில் மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றிருந்தேன். இலங்கை பற்றி பத்திரிகையில் படிப்பதற்கும் நேரிடையாக நான் சந்தித்த காட்சிகளுக்கும் நிறைய வித்தியாசம். இதுபற்றி விரிவாக எழுத இருக்கிறேன்.
நன்றி.
வாழ்த்துகள் தோழி.
வாழ்த்துக்கள் அக்கா.
முதலில் நீ யார் சொல் என்று நீங்கள் முணுமுணுப்பது தெரிகிறது. பெயர் ப. அருள்நேசன்,நீங்கள் அறியாத முகம் தான். கவிதைகளின் வசகன் கனவுகளின் யாசகன். போதுமா. அளையாத விருந்தாளி என்பதால் கொங்சம் தயங்கியே வாசலில் நிற்கிறேன். உள்ளே கூப்பிடுவீங்களில்லயா?
மீண்டும் வாள்த்துக்கள். அழகான கவிதை காத்திரமான வரிகள்
சிநேகத்துடன்.....
வாருங்கள் முகவைத் தமிழன்
"புதையுண்டது தனது விம்பமென்று தெரிந்த பின்பும் அதை சாபமென எண்ணி குருவி அழுவது ஏன்?"
அது தெரியாமல் தான் அதற்காக ஒரு கூட்டையும் கட்டிவைத்துக் காத்திருந்தது.
ஒரு மாயை சிதைந்து போன பின்னரும்
அதை நினைத்து அழுகிறது - எங்களில் சிலரைப் போலவே
வாருங்கள் ரிஷான்
"கண்ணாடி விம்பத்துடன் சேர்ந்து வாழக் கூடு கட்டிக் கனவுகள் நொறுங்கிய பறவையின் சோகம் உங்கள் வரிகளில் மிகவும் வலிமையாகத் தாக்குகின்றன"
சரியாகக் கண்டுபிடித்திருக்கிறீர்கள்.
:)
சரி.
அப்பாலே வந்து சேருங்க நாமக்கல் சிபி
வாருங்கள் கவிநயா
"இப்படித்தான் எல்லோரும் எதெதிலோ சிக்கிக் கொண்டிருக்கிறோம்.. விம்பங்களை நிஜமென்று எண்ணி ஏங்கி அழுது கொண்டிருக்கிறோம்.."
அங்கேயும் அதுவா கதை?
gokulan வாருங்கள்
"அன்புத்தோழி கவிதை புரிகிறது.. கூடவே வலியும்.."
உங்கள் வரவுக்கு நன்றி.
ஆடு மாடு வாருங்கள்
முதன் முறையாக எனது கவிதகளுக்குப் பின்னூட்டம் இட்டுள்ளீர்கள் என நினைக்கிறேன். மகிழ்ச்சியடைகிறேன்.
"தம்பிக்கு எழுதிய கவிதை படித்து கண்ணீர் வடித்தேன். எல்லாவற்றையும் அனுபவங்கள் சொல்கிற கவிதையாகவே பார்க்கிறேன்."
அந்தக் கவிதை கற்பனையில்லை.அதில் உள்ள ஒரு வரி கூட முனைந்து சேர்க்கப்பட்டதல்ல.
"சமீபத்தில் மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றிருந்தேன். இலங்கை பற்றி பத்திரிகையில் படிப்பதற்கும் நேரிடையாக நான் சந்தித்த காட்சிகளுக்கும் நிறைய வித்தியாசம். இதுபற்றி விரிவாக எழுத இருக்கிறேன்"
காட்சிகள் யாவும் உண்மையில்லை.அழகுக்கு மிகச் சமீபமாக பயங்கரமும் காத்திருக்கிறது இங்கே.எழுதுங்கள் எழுதுங்கள்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
வாருங்கள் தம்பி அருள்நேசன்
முதன் முறையாக வந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
"வாழ்த்துக்கள் அக்கா.
முதலில் நீ யார் சொல் என்று நீங்கள் முணுமுணுப்பது தெரிகிறது"
இந்த வரிகளிலேயே நீங்கள் என்னைப் பற்றித் தெரிந்து கொண்டே வந்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது.
உங்களைப் பற்றியம் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
உங்கள் வரவுக்கு நன்றி.
//கண்ணாடி விம்பத்துடன் சேர்ந்து வாழக் கூடு கட்டிக் கனவுகள் நொறுங்கிய பறவையின் சோகம் உங்கள் வரிகளில் மிகவும் வலிமையாகத் தாக்குகின்றன.//
வெடித்து சிதறியது மனது..
:(
Post a Comment