பாதைகள் அழைக்கின்றன
ஆசைகள் நிரம்பிய உள்ளம் அழைக்கிறது
ஆனாலும்
அவளை ஆழிக்குள் புதைக்கிறாய்

நட்சத்திரக் கூட்டங்களெல்லாம்
அதே தரிப்பிடங்களில்
இன்னும் வழிபார்த்திருக்கின்றன
அன்பைக் கொன்ற நீயோ
அவளது வழிகளை மூடுகிறாய்

அதிகாலையில்
தூய அருவியொன்றிலிருந்து
அவளது எளிய குடிசை நோக்கிச்
சுமந்து வந்த தெள்ளிய நீர்க்குடத்தை -நீ
கல்லெறிந்து உடைத்த வேளை
தவத்தில் மூழ்கியிருந்த
அவள் கானகத்து மான்கள்
திகைத்தோடித் திசை மறந்தன

மீளவும் உடைத்திட முடியாக்
கலயம் சுமந்து புறப்பட்டவளைக்
கலங்கிய நீர் ஓடைகளில்
திரும்பத் திரும்ப இறக்கிவிட்டாய்
வீடடைய முடியாத
இருள் வழியெங்கும்
அவளது பாதங்களை அலைக்கழித்தாய்

அவள் நீர் ஊற்றிக் காத்திருந்த
செழிப்புமிகு பயிர் நிலங்களில்- உனது
அடங்காப்பிடாரி ஆட்டுக் குட்டிகளை
விளையாட அனுப்பினாய்

கதிர்களை நீ
நாசமறுக்காதிருந்திருப்பாயானால்
தானியக் களஞ்சியங்களை
வாழ்வின் ஆதாரங்கள் கொண்டு
நிரப்பியிருப்பாள்

இறுதியாக
உயிர் விடைபெறப் போகும்
துறைமுகமொன்றில் அவளைச் சந்தித்தாய்
சொல்,
மாபெரிய கண்ணீர்க் கடலில்
அவள் இறங்கிப் போன போது
நீ தானே வழியனுப்பி வைத்தாய்