எங்கும் வியாபித்து அரசாட்சி செய்தது இருள்:
அடர்ந்து செறிந்த இருளினூடு சிள்ளுடுகளும் தவளைகளும்
தமதிருப்பைச் சொல்லித் தயங்கித் தயங்கி ஒலித்தன

மயான அமைதி பூண்ட சூழலைத் தகர்த்தவாறு
வீதியில் ஓடும் காலடிச் சத்தம்-அச்சத்தினூடு
என் கேட்டல் எல்லையினுள் வளர்ந்து தேய்கிறது.
பின் தொடரும் அதிர்ந்து செல்லும் வண்டியில்
அவர்கள் வலம் வருகிறார்கள் போலும்
ஓடிய அந்தப் பாதங்கள் எந்தச் சந்து தேடி ஒளிந்தனவோ?
உருத்தெரியா அந்தக் காலடிகளுக்காக உள்ளம் துடித்தழுதது

அச்சம் கலந்து பிசைந்து விழுங்கிய உணவும்
பீதியுடன் தொண்டைக் குழிக்குள் இறங்கிய நீரும்
பிசாசுகளை எண்ணிப் பயந்ததில் தீய்ந்து விட்டன
அந்த வேளைதனில் உனை ஏன் நினைத்தேன் என்று தெரியவில்லை

அன்று மழை ஓய்ந்த அந்திப் பொழுதில்
அவர்கள் வந்து போயிருக்க வேண்டும்
எமது கல்லூரி முற்றவெளியெங்கும் வரிசை பிசகாத
சப்பாத்துக் கால்களின் சுவடுகள் எஞ்சியிருந்தன.
இரத்தக் கறைதோய்ந்த மண்டபத்து மூலையறைச் சுவர் மீது
புதிய தடயங்களை கண்ணிரண்டும்
பயத்துடனே தேடி நடுநடுங்கின.
என் விழிகளுக்குள் வெளவால்கள் சடசடத்துப் பறந்தன

ஆதிரை:
கடைசியாக நீ கல்லூரி வந்ததினம்
அதுவென்றுதான் நினைக்கிறேன்
அன்று சிரித்திடவே இல்லை நீ
சிந்தனை வயப் பட்ட முகத்துடன்
கல்லூரி வளவெங்கும் அலைந்து திரிந்தாய்


பின்னர் நான் பார்க்க நேர்ந்த போராளிகளின் படங்களிலெல்லாம்
உன் முகத்தைத் தேடித் தோற்றேன்
இறுகிய முகக் கோலத்தை எப்படிப் பொறுத்தினாயோ?
நெஞ்சிலும் முதுகிலும் ஏதேதோ நிரப்பிய பைகளுடன்
சுடுகலன் ஏந்திய சிலை முகத்தைக் கற்பனை செய்து
பெருமூச்செறிந்தேன்: நீ இனி வரப் போவதில்லை

துப்பாக்கி வரைந்த உன் இரசாயனவியல் குறிப்பேட்டைப்
பத்திரப் படுத்திவைத்துள்ளேன்.
பாடத்தைவிட்டு உன் கவனம் திசைமாறிய தருணங்களில்
ஓரங்களில் நீ எழுதியுள்ள வாசகங்கள்
விட்டு விடுதலையாகும் உன் சுதந்திரக் கனவைச் சொல்கின்றன

உன் நகர்வுகளை மோப்பம் பிடிக்கும்
அறிமுகமற்ற சப்பாத்துக் கால்கள்
சனியன்களால் ஆட்டுவிக்கப்படும் நாளைகளிலும்
எமது வாழிடங்களில் பதிந்து செல்லலாம்
நீ கவனமாயிருந்து இலட்சியத்தை வெற்றிகொள்

பஹீமாஜஹான்
(2001-மூன்றாவது மனிதன்)