இறுக மூடப்பட்ட
வீட்டினுள் வர முடியாது
நனைந்து கொண்டிருக்கிறது
மழை

ஆட்டுக் குட்டிகளுடன்
தாழ்வாரத்தில் ஒதுங்கி நின்று
இன்னொரு
புல்வெளி தேடிப் போவதற்குத்
தருணம் பார்க்கிறது

புகார்கொண்டு
தன்னைப் போர்த்தியவாறு
தென்னந் தோப்பினுள்
வழிதவறியலைகிறது

வாய் திறந்து பார்த்திருந்த
நீர் நிலைகளின்
கனவுகளை நிறைவேற்றிய பின்
மீன் கூட்டங்களைச்
சீதனமாகக் கொடுத்துச் செல்கிறது

யார் யாரோ
வரைந்த கோடுகளையெலாம்
தனது கால்களால்
தேய்த்து அழித்துச்
சேற்றில் புரண்டவாறு
வீதிகளைக் கழுவுகிறது

பெரும் கோட்டைகளையெலாம்
கரைத்தழித்திட நினைத்து
நிறைவேறாமற் போகவே
அவற்றின் வசீகரங்களை
கழுவிக் கொண்டு நகர்கிறது

ஆழ் மண் வரையும்
நீரிட்டு நிரப்பிய பின்
அடுத்துச் செய்வதென்ன?
என்ற வினாவுடன்
தரை மீது தேங்கி நிற்கிறது

ஓய்ந்திட மாட்டாமல்
இன்னொரு
வெப்ப மழை பெய்து கொண்டிருந்த
அவள் முகத்தில் வீழ்ந்த கணத்தில்
தனது ஆவேசமெலாம்
ஒடுங்கிப் போய்விடப்
பெய்வதை நிறுத்திப்
பெருமூச்செறிந்து போயிற்று
அந்த மழை

(நன்றி:மறுபாதி)