மழை கசிந்து கொண்டிருக்கும்
இருள் தேங்கிய அதிகாலையில்
உங்கள் நினைவுக் குறிப்புகளைப்
புரட்டிக் கொண்டிருக்கிறேன்
பிசு பிசுக்கும் புல் வெளியின்
வேர்களிடையே தேங்கிக் கிடக்கிறது
நேற்றைய பெரு மழை


நதிகள் பெருக்கெடுத்தோடும்
நிர்க்கதி மிகுந்த தீவில்
இந்த மழையை
யாருமே வரவேற்றதில்லை
உங்களிடமிருந்து
பிரிவின் போர்வை எடுத்து
எனை மூடுகிறேன்


என் நதி சுமந்து வந்த
திரவியங்களனைத்தையும்
உங்களிடமே கொடுத்தேன்


திடுமென வருமோர்
காட்டாற்று வெள்ளத்தில்
என் கரை வளர்த்த மரங்கள்
இழுபட்டுச் செல்லாதிருக்கப்
பின்னிப் பின்னிப் பிணைந்திருக்கும்
பெயர் தெரியாப் பெருங்கொடிகள்


நனைந்த பூமி உலர்ந்திட
நாளை வரும் கோடையில்
உங்கள் நதித் தீரங்கள் ஊடாக
ஊற்றெடுத்து ஓடிக் கொண்டிருக்கும்
என்றென்றைக்குமான
என் குரலோசை

பஹீமாஜஹான்

நிழல் மரங்களற்றுச்
சூரியன் தவிதவிக்கும்
நெடுஞ்சாலையோரம்
வெய்யிலை
உதறி எறிந்தவாறு
நடக்கிறாள் மூதாட்டி


குதி கால்களால்
நெடுங்களைப்பை
நசுக்கித் தேய்த்தவாறு
காற்றைப் பின் தள்ளிக்
கைகளை வீசுகிறாள்

வெய்யில்
மிகப் பெரும் தண்டனையை
வழி நீளப் பரவவிட்டுள்ளது.
வேட்டை நாய் போல
அவள் முன்னே
ஓடிச் செல்கிறது நிழல்

பதிந்தெழும் ஒவ்வொரு சுவட்டிலும்
தேங்கி நடுநடுங்குகிறது
ஆதியிலிருந்து தொடரும் துயரம்.

பஹீமாஜஹான்

நோய்

காற்றில் திரிதலாகா
தண்ணீர் அலைதலாகா
ஓயந்திருக்க வேண்டுமன்றி ஓடிவிளையாடலாகா
காய்ச்சலின் உச்சகட்டத்தில்
டாக்டர் தாத்தாவின் கட்டளைகள் நீளும்
நாடு கொளுத்தும் ராசாவுக்கு நெருப்பெடுக்கும் மந்திரியாக
நின்றிருப்பாள் அருகே அன்னை
நிறைவேற்றவியலாக் கட்டளைகளைக் கேட்டவாறு
சின்னஞ் சிறுமி மௌனமாக அமர்ந்திருப்பேன்




ஆணை மீறல்

விளையாட்டும் முற்றமுமெனை
வந்தனங்கள் கூறியழைக்க
வயல் காற்றுலவும் வெளியெங்கும்
அலைந்து திரிவேன்
இசைவானதொரு தருணம் வாய்ப்பின்
காகித ஓடங்களை
வயலோர வாய்க்காலில்
மிதந்து போகவிட்டு மீள்வேன்
மருந்துண்ணும் வேளையதில்
பெரியம்மா, அண்ணன்மார்களெனும்
அயல்வீட்டு இராணுவமெனைக் கைப் பற்றிக்
கொண்டுவரும் அம்மாவினெதிரே

மருந்துண்ணல்

மாத்திரைத் துண்டொன்றையும் சீனியையும்
கரண்டியில் இட்டுக்
கரைத்தெடுத்துவரும் கொடுமை கண்டு
எனதழுகை உரக்கத் தொடங்கும்
கை, கால், தலையெனப் பற்றி
அசையவிடாது எனையமர்த்திச்
சூழ்ந்து நிற்கும் சக்கரவியூகம்
காவல் தேவதையாம் அம்மம்மாவையும்
தூர நிறுத்தி வைத்திருக்கும்
அக்கணத்தின் அதிகாரம்
தெரு முனைவையும் தாண்டி எனதார்ப்பாட்டம்
பாதையில் போவோரைத் திரட்டிவரும் வீட்டருகே
கசக்கும் பிசாசு வாய் நோக்கி வரும் போது
தாரை தாரையாய் வழிந்தோடக் கண்ணீர்
இறுக மூடிக் கொள்வேன் உதடுகளை
கடும் பிரயத்தனத்துடன் அம்மா
கரைசலை வாய்க்குள் இடச்
சிந்தியதும் உமிழ்ந்ததும் போக
ஒரு துளியை விழுங்கிய பின்
அனைத்துக்குமாக
ஆரம்பத்திலிருந்து அழத்தொடங்குவேன்

துயரிலிருந்து மீள்தல்

அப்போது வருமென் காவல் தேவதை
தூக்கி அணைத்திடுவாள்
வாய் கொப்பளிக்க வைத்துக்
கசந்த நாவில் வெல்லமிட்டு
ஆறாகப் பெருகுமென் கண்ணீர் துடைத்திடுவாள்
தோளிலே படுக்க வைத்துச்
சேலைத் தலைப்பைப் போர்வையாக்கித்
தோட்டமெங்கும் சுமந்தலைவாள்
கதைகள் நூறு சொல்லி
அழ வைத்தவர்களைப் பேசி
அழுகையை ஓய வைப்பாள்
நானுமொரு பறவையென
மாமரக் கிளைகளில் தத்திப் பாயும்
புள்ளினங்களில் இலயித்திருக்கையில்
மீண்டுமெனைப் படுக்கையில் கிடத்திக்
காவலிருப்பாள்


நோயிலிருந்து மீளும் நிகழ்காலம்

விழிகளைத் திறக்க முடியாத களைப்பும்
வலுவிழந்த உடலும் சற்றே தேறிட
எழுந்தமர்ந்துள்ளேன்
இளைத்த இவ்வந்தியில்

துடைத்தழித்திட முடியாமல்
நோயின் வலியைத் தாங்கி நிற்கும் முகத்தை
விசாரிக்க வருவோரிடமிருந்து
மறைப்பது பற்றிச் சிந்திக்கிறேன்

மின் கம்பியில் குந்தியவாறு
எனதறையையே பார்த்திருந்த வெண் பறவைக்கு
மரணத்தின் துர்க்குறிகள் கிட்டவில்லை

ஓய்வற்று உலன்றிடப் போகும்
நாளைய தினத்திலிருந்து
கசிந்து வருகிறது
நொந்த உடலுக்கான நஞ்சு

பஹீமாஜஹான்

தூர தேசப் பறவையொன்று
தங்கிச் சென்ற மரம்
மீளவும்
அந்தப் பறவைக்காகக்
காத்துக் கிடக்கிறது

தன் கிளைகள் எறிந்து தேடும்
வான் பரப்பில் பறவை
அதன் பாடலைப்
பதித்துச் செல்லவில்லை.
வேர்கள் ஊர்ந்து பரவும் மண்ணில்
அது
எந்த நிழலையும்
விட்டுச் செல்லவும் இல்லை

மலைகளிடமோ நதிகளிடமோ
பறவை தனது
பயணப்பாதை பற்றிய
செய்தி எதனையும்
பகன்றிடவே இல்லை

சூரிய சந்திரரும்
தாரகைக் கூட்டங்களும்
குருவியின் சேதிகளை
உரைத்திட மொழியின்றி மறையும்

வேர்களும் கிளைகளும்
நீளமுடியாமலொரு பெருங்கடல்
மெளனத்தில் உறைந்த
மரத்தைச் சூழ்ந்திருந்து
ஆர்ப்பரிக்கிறது நிதமும்

பஹீமாஜஹான்
(நன்றி:புதியபார்வை)