தோட்டம்:
அறுவடை ஓய்ந்த வயல் வரப்புகளில்
மந்தைகள் மேயவரும் காலங்களில்
கோடை தன் மூச்சைக் கட்டவிழ்க்கும்
ஆற்றங்கரைத் தோட்டத்துப் பசுமையும் கருகும்.
"தண்ணீர் தேடிப் பாம்பலையும்
காட்டில் திரியாதே"
அம்மம்மாவின் கவனம் பிசகும் கணமொன்றில்
பதுங்கிப் பதுங்கி நோட்டம்விட்டுத்
தோட்டம் பார்த்து ஓட்டமெடுப்பேன்.
அச்சம் தவிர்த்திடவும் கொய்யா பறித்திடவுமாய்
கையிலே ஓர் தடி
அத் தடியையும் செருப்பொரு சோடியையும்
மரத்தடியில் விட்டுக்
கிளையொன்றில் அமர்ந்து கொள்வேன்.
கற்பனையும் பாடலும் தோட்டமெங்கிலும் பரவி
பள்ளத்தே பாய்ந்தோடும் ஆற்றிலும் கரைந்தோடும்.

ஆறு:
ஆற்றின் நீரோட்டம் படிப்படியாக வற்றி
கோடையின் உச்சத்தில் நரைத்த தேகம் பூணும்
மாலைப் பொழுதொன்றில்,
தாம்பூலமிடித்து வாயிலேதரித்து வீட்டைப் பூட்டிச்
சேலைத் தலைப்பில் சாவியை முடிந்து சொருகி இடுப்பில்
தீர்க்கதரிசனத்துடன் புறப்படுவாள் அம்மம்மா
மண்வெட்டியை ஊன்றி ஊன்றி.
காரணம் கேட்டு நிற்கும் என்னிடமோ
புதையல் அகழ்ந்திடப் போவதாய்க் கூறி நடப்பாள்.
நானும் தொடர்வேன்,
தோட்டத்து ஒற்றையடிப் பாதையின் சருகுகளைச்
சிறு மண் வெட்டியால் இழுத்தவாறு
அவள் பின்னே

புதையல்:
அத்திமரத்தின் கீழே
கருநிறப் பாசி படர்ந்து
நீர்ப் பூச்சிகள் சருக்கள் நிகழ்த்தும்
நீர் தேங்கிய மணலை அகழத் தொடங்குகையில்
வெண்ணிற மணலோடு
சலசலத்து ஊறும் குளிர் நீர்
ஊறிவரும் நீரை வழிந்தோட வைக்கும்
கால்வாய் அமைப்பையும் அவளே அறிவாள்.

அத்தியின் கிளைகள் ஆடும்
தெள்ளிய நீர்ச்சுனையை
உருவாக்கிய பெருமிதத்துடன்
மாலை இருளை ஆற்றில் விட்டுக்
கரையேறி வீடடைவோம் சிறுமியும் பாட்டியும்.

நாசகாரன்:
பின்னாளில்
எல்லோரும் வந்தங்கே துவைப்பர் குளிப்பர்.
இடையிடையே உயர்ந்த ஆற்றங் கரையின்
மூங்கில் மரங்களின் மறைவில் நின்று
வந்திருப்பவரை அடையாளங் கண்டு திரும்புவாள் பாட்டி.
பின்னும்
கண்காணிப்புத் தவறிய இடைவெளியில் வந்து
படுகுழி தோண்டி வைத்துப் போயிருப்பான்
அவளது வடிகாலமைப்பு ஞானத்தின் துளியும் வாய்க்காத
அற்பப் பயலொருவன்.
தெளிந்த நீர் ஊற்றுக் குட்டையாக மாறி
அழுக்கு நீர் சுற்றிச் சுழலுமங்கே
நாசமறுத்த பயலவனை முனிந்த படி
மீளவும் புணரமைப்பாள் வியர்வை வழிந்திட அம்மை.

(கலைமுகம் இதழுக்காக எழுதியது)

பஹீமாஜஹான்









கங்குல் விலகாத காலைப் பொழுதில்
இருள் தேங்கிய வானில்
மின்னற் கோடுகள் ஓடுவதான 'சேட்'டில்
இரு சூரியரைக் கண்ணாடி வில்லைகளால்
முகத்தில் மறைத்துக்
கம்பீரமாய் -நீ
தினமும் ஆழம் தேடி
உள் நுழையும் இரு வாசல்களையும்
இமைக்குள் தாழ்த்தி
ரோசா வண்ண உடையில்
பிரியம் மலர்ந்திட
உன்னுடன் ஏறிக் கொண்டேன்


மழை முகில்கள் தொங்கிக் கிடந்த அதிகாலையில்
நெடுந்தூரம் கடந்தோம்
உடனிருந்த சிறுவர்களின் சேட்டைகளில்
ஒருவரையொருவர்
எண்ணிப் பயணிக்கும்
கனவுகளில் இருந்து மீண்டோம்

சீதளம் செறிந்த அடர் இருள் வனத்தினுள்
புகுந்த வேளை
இடி முழக்கத்துடன் 'சோ'வென இறங்கியது
கிளைகள் பணிந்து பெரு மழை

இறுதி யன்னலையும் மூடி
இசை தவழ்ந்த வாகனத்துள்ளே
ஒளியையும்
வாசணை கமழும் குளிரையும் பரவவிட்டாய்
மஞ்சள் ஒளியுடன்
ஆடைகளில் படியத் தொடங்கியது
உனது சுகந்தத்துடனான ஈரவளி

வழி நீளப் பேரிடிகள் முழங்கி அச்சுறுத்தச்
சிறியவர் எதிரே
உனது தைரியம் எனையும் தொற்றியது
மலையை ஏந்தும் வல்லமையுடன் நீ
வீழ்ந்து கொண்டிருக்கும்
மழைத் துளியொன்றன்றி வேறேது நான்?

நீர்ச் சுமையில் முறிந்து சரியும்
கிளைகள் குறித்த பயம்
அடவியைத் தாண்டியதும்
விலகிப் போயிற்று
பெய்தல் நின்ற வானத்திலிருந்து
வந்தடைந்த முதல் கிரணம்
பிள்ளைகளின் முகங்களில்
புன்னகையைத் தீட்டியது

ஓய்ந்திருந்த இசையும் ஓசையும்
மீள வலுத்தது
நுழைவாயிலருகே
எனை விடுவிக்கும் வேளையில்
ஆழ்ந்து ஊடுறுவுமொரு பார்வையை எறிந்தாய்
இப்போது
அடர் வனத்தினுள்ளே பெரு மழையாய் நீ
எனதான்மாவினுள் நுழையத் தொடங்குகையில்
ஆண்டாண்டு காலப் போர்வைகள் கொண்டு
எனை மூடிப் போகிறேன் நான்

பஹீமாஜஹான்
(கலைமுகம் சஞ்சிகைக்காக எழுதப் பட்டது)