கங்குல் விலகாத காலைப் பொழுதில்
இருள் தேங்கிய வானில்
மின்னற் கோடுகள் ஓடுவதான 'சேட்'டில்
இரு சூரியரைக் கண்ணாடி வில்லைகளால்
முகத்தில் மறைத்துக்
கம்பீரமாய் -நீ
தினமும் ஆழம் தேடி
உள் நுழையும் இரு வாசல்களையும்
இமைக்குள் தாழ்த்தி
ரோசா வண்ண உடையில்
பிரியம் மலர்ந்திட
உன்னுடன் ஏறிக் கொண்டேன்


மழை முகில்கள் தொங்கிக் கிடந்த அதிகாலையில்
நெடுந்தூரம் கடந்தோம்
உடனிருந்த சிறுவர்களின் சேட்டைகளில்
ஒருவரையொருவர்
எண்ணிப் பயணிக்கும்
கனவுகளில் இருந்து மீண்டோம்

சீதளம் செறிந்த அடர் இருள் வனத்தினுள்
புகுந்த வேளை
இடி முழக்கத்துடன் 'சோ'வென இறங்கியது
கிளைகள் பணிந்து பெரு மழை

இறுதி யன்னலையும் மூடி
இசை தவழ்ந்த வாகனத்துள்ளே
ஒளியையும்
வாசணை கமழும் குளிரையும் பரவவிட்டாய்
மஞ்சள் ஒளியுடன்
ஆடைகளில் படியத் தொடங்கியது
உனது சுகந்தத்துடனான ஈரவளி

வழி நீளப் பேரிடிகள் முழங்கி அச்சுறுத்தச்
சிறியவர் எதிரே
உனது தைரியம் எனையும் தொற்றியது
மலையை ஏந்தும் வல்லமையுடன் நீ
வீழ்ந்து கொண்டிருக்கும்
மழைத் துளியொன்றன்றி வேறேது நான்?

நீர்ச் சுமையில் முறிந்து சரியும்
கிளைகள் குறித்த பயம்
அடவியைத் தாண்டியதும்
விலகிப் போயிற்று
பெய்தல் நின்ற வானத்திலிருந்து
வந்தடைந்த முதல் கிரணம்
பிள்ளைகளின் முகங்களில்
புன்னகையைத் தீட்டியது

ஓய்ந்திருந்த இசையும் ஓசையும்
மீள வலுத்தது
நுழைவாயிலருகே
எனை விடுவிக்கும் வேளையில்
ஆழ்ந்து ஊடுறுவுமொரு பார்வையை எறிந்தாய்
இப்போது
அடர் வனத்தினுள்ளே பெரு மழையாய் நீ
எனதான்மாவினுள் நுழையத் தொடங்குகையில்
ஆண்டாண்டு காலப் போர்வைகள் கொண்டு
எனை மூடிப் போகிறேன் நான்

பஹீமாஜஹான்
(கலைமுகம் சஞ்சிகைக்காக எழுதப் பட்டது)