அதி வேக ஊர்திகளாலும் அவசரங்களாலும்
ஆக்கிரமிக்கப் பட்ட தெருவில்
கவனத்தைப் பதித்துச் சென்ற
காலைப் பொழுதொன்றில் நீயழைத்தாய்:
என் பெயர் கூறியழைத்தாயோ....
எதைச் சொல்லிக் கதைத்தாயோ....
இரைச்சலில் நழுவவிட்டு விட்டேன் -
உனது ஆரம்பச் சொற்களை - பின்னர்
கம்பீரமான குரலில் உனது பெயர் கூறி
நீளமான சொற்களை நீயுதிர்த்தாய்!

திகைத்துத் தடுமாறி
தெருவிலிருந்து நீங்கிய பின் உன்னுடன் கதைத்தேன்
பிரிவைச் சொன்னாய்:
பல நூறு நட்சத்திரங்கள் மின்னிய வானத்தைச் சுருட்டி
எங்கோ எறிந்து
அருவிகளையும் ஓடைகளையும்
என்னிடம் விட்டு விட்டு
அதற்கப்பால் நீ போனாய்!

பண்பாடுகளாலும் விழுமியங்களாலும்
நீ எனக்களித்த கெளரவங்களாலும்
கட்டப் பட்டுக் கிடக்கிறேன்
ஒன்றுமே அறியாதவனா நீ?
திரும்பித் திரும்பிப் பார்த்து
எனதான்மாவிலிருந்து எதனையோ
எடுத்துச் சென்ற பின்பும்
ஒன்றுமே அறியாதவனா நீ?

காற்றில் உதிரும் இலைகளோடு
எந்த ஒசையுமற்று உதிர்ந்து கொண்டிருக்கிறேன்
கிளை பரப்பித் தளிர்த்தோங்கிட நான்
காற்றிலே இசை நிரப்பித் தந்தாய் நீ

கண்ணீரையும் பிராத்தனையையும்
ஏந்தி உயர்கின்ற கரங்களின் விரலிடுக்கினூடு
உறவின் நூலிழைகள் வழிகின்றன.

நீ என்னிடம் விட்டுச் சென்ற
ஈரப் பார்வைகள்
இன்னும் எனை உற்றுப் பார்த்தவாறே கிடக்கின்றன.

ஃபஹீமாஜஹான்

இருள் செறிந்த இராப் பொழுதில்
ஒளியைத் தேடித் தவித்திருந்ததென் தெரு வழியே
இனிய குரலெடுத்துப் பாடிச் சென்றாய்
விஷு வருடத் தை மாத இருபத்தோராம் நாளில்

வாசல் திறந்தேன்
நீ போனதற்கான தடயங்களின்றி
இருள் நிறைந்த பெருவெளி என் கண்களில் மோதியது
மின்மினிகளும் தூரத்து வானின் நட்சத்திரங்களுமின்றிக்
கால்களில் இடறுண்டது என் முற்றவெளி

உனது பயணத்தின் குறியீடாகப்
பாடிச் சென்ற பாடல்
சோகத்தில் துடிதுடித்த ஏதோவொன்றை
இடிந்து தகர்ந்த நகரின் சிதைவுகள் மீதும்
குட்டிச் சுவர்களாய் எஞ்சியிருந்த குடிமனைகள் மீதும்
சனங்கள் எழுந்து சென்ற பூர்விகத் தளங்கள் மீதும்
பல்லாயிரம் இளைஞர்களின் புதை குழிகள் மீதும் தடவிற்று

நிலவையழைத்து
ஒளிச் சுடரொன்றினை அழைத்துத்
தனித்த பயணத்திற்கொரு
வழித்துணையை அழைத்து எழுந்த உன் குரல்
அன்றைய இரவு நீளவும் எதிரொலித்தது

உன் குரலினைப் பின் தொடர்ந்து
வெகு தூரம் வந்தேன் நான்
நடந்த கால்களின் கீழே கண்ணீர் நழுவி ஓடியது
சிரித்த ஒலிகளை ஊடுருவி நிலவின் தண்ணொளி படிந்தது
மரங்களின் பழுத்த இலைகளை உதிர்த்தவாறு
எங்கிருந்தோ வந்த காற்று
யாரோ ஏற்றி வைத்த என்ணற்ற தீபங்களை
எதுவும் செய்யாமல் போயிற்று
இரவின் வானத்தின் கீழே

எனை மோதி வீழ்த்தக் காத்திருந்தது
என் முற்றவெளி

ஃபஹீமாஜஹான்

வெட்டி வீழ்த்தப் பட்ட மரத்தின்....
அடிக்கட்டை மீது
அமர்ந்துள்ளது பறவை

இன்று அதனிடம்
பறத்தலும் இல்லை..
ஒரு பாடலும் இல்லை....

அதன் விழிகளின் எதிரே
வெயில் காயும்
ஒரு பெரு வெளி விரிந்துள்ளது

அந்த மனிதர்களைச் சபிக்கிறதோ
தனது கூட்டை எண்ணித் தவிக்கிறதோ

பறத்தலையும் மறந்து,
பாடலையும் இழந்து
வெட்டி வீழ்த்தப்பட்ட மரத்தின்
அடிக்கட்டை மீது
அமர்ந்துள்ளது பறவை