இருள் செறிந்த இராப் பொழுதில்
ஒளியைத் தேடித் தவித்திருந்ததென் தெரு வழியே
இனிய குரலெடுத்துப் பாடிச் சென்றாய்
விஷு வருடத் தை மாத இருபத்தோராம் நாளில்

வாசல் திறந்தேன்
நீ போனதற்கான தடயங்களின்றி
இருள் நிறைந்த பெருவெளி என் கண்களில் மோதியது
மின்மினிகளும் தூரத்து வானின் நட்சத்திரங்களுமின்றிக்
கால்களில் இடறுண்டது என் முற்றவெளி

உனது பயணத்தின் குறியீடாகப்
பாடிச் சென்ற பாடல்
சோகத்தில் துடிதுடித்த ஏதோவொன்றை
இடிந்து தகர்ந்த நகரின் சிதைவுகள் மீதும்
குட்டிச் சுவர்களாய் எஞ்சியிருந்த குடிமனைகள் மீதும்
சனங்கள் எழுந்து சென்ற பூர்விகத் தளங்கள் மீதும்
பல்லாயிரம் இளைஞர்களின் புதை குழிகள் மீதும் தடவிற்று

நிலவையழைத்து
ஒளிச் சுடரொன்றினை அழைத்துத்
தனித்த பயணத்திற்கொரு
வழித்துணையை அழைத்து எழுந்த உன் குரல்
அன்றைய இரவு நீளவும் எதிரொலித்தது

உன் குரலினைப் பின் தொடர்ந்து
வெகு தூரம் வந்தேன் நான்
நடந்த கால்களின் கீழே கண்ணீர் நழுவி ஓடியது
சிரித்த ஒலிகளை ஊடுருவி நிலவின் தண்ணொளி படிந்தது
மரங்களின் பழுத்த இலைகளை உதிர்த்தவாறு
எங்கிருந்தோ வந்த காற்று
யாரோ ஏற்றி வைத்த என்ணற்ற தீபங்களை
எதுவும் செய்யாமல் போயிற்று
இரவின் வானத்தின் கீழே

எனை மோதி வீழ்த்தக் காத்திருந்தது
என் முற்றவெளி

ஃபஹீமாஜஹான்