மலையேறியதன் வலி
கால்களைவிட்டு நீங்கிய
காலைப் பொழுதொன்றில்
மலையேறிய ஆடைகளைக்
கழுவத் தொடங்கியிருந்தேன்

வியர்வைபடிந்துபோன
அவ்வாடைகளைத் தொடும் வேளை
மறுபடியும்
கைகளில் தோய்ந்தது
கசந்து போனதொரு வேதனை

அன்று
மலையுச்சியையடைந்த வேளை
மெளனம்.
ஒரு நீள் கோட்டில்
தன்னைத் தொலைத்திருந்தது
பளபளக்கும் மாபெரும் கடல்

ஆகாயத்தின் கீழிலிருந்து ஆழிப்பரப்பு வரை
அளந்தளந்து அலைவதே
தம் ஜீவிதமெனப்
பறந்து கொண்டிருந்தன
அக் கடலின் பறவைகள்

காலங்காலமாய்க்
கடலைப் புறக்கணித்துத்
தானுயர்ந்து நிற்பதான
மலைமுகட்டில் நானிருந்தேன்

கல்லாய்ச் சமைந்த
மலையை இகழ்ந்தவாறு
ஆதியில் தொடங்கிய அதே திமிருடன்
உலகம் சுற்றிவரும்
கடலலைகளில்
நீ தரித்திருந்தாய்

தலைக்கு மேலே
எல்லா இரகசியமும் தாங்கி
ஓங்கி நின்றிருந்தது
கார் கொண்ட ககனம்

மலையிறங்கி வந்த பின்பும்
மலைநோக்கும் கணந்தோறும்
கால்களில் வந்து சேர்கிறது
நகரமுடியா ஒரு வலி

2010.08.22
(நன்றி: கல்குதிரை வேனிற்காலங்களின் இதழ் 2011)




இக்கணத்தில்
உனை விலகிப்போவதைத் தவிர
வேறு மார்க்கம் ஏதுமில்லை


எல்லா அபிமானங்களையும்
ஒதுக்கிவிட்டால்
ஒரு சத்திரத்தைப் போல
எளிமையாக உள்ளது
வாழ்க்கை


உன் வழி அதுதான் எனத்
தேர்ந்தெடுத்து நீ விலகிய பின்
யாரும் பயணித்திராத
துயர்மிகு பாதை இதுவானாலும்
நான் இனிப்
போய்த் தான் ஆகவேண்டும்


கோபம் விளைவித்த துணிச்சல்
என் முன்னே வேகமாக நடக்கிறது
வெகு சீக்கிரத்திலேயே
நான் திரும்பி விடுவேன் என
நீ காத்திருக்கலாம்


ஏளனப் புன்னகை
மெல்ல மெல்ல மறைந்து
உன் முகத்தில் இறுக்கம் வந்தமர்ந்து
விபரீதத்தை உணரும் கணத்தில்.....
நீ வரவே முடியாத வெளியொன்றில்
எனதாத்மா மிதந்து கொண்டிருக்கும்

2010.08.29 இரவு 9 மணி
(நன்றி : கல்குதிரை வேனிற்காலங்களின் இதழ்-2011)




நீ வராத பகற்பொழுதில்
படிந்துள்ள புழுதியைக்
கிளப்பியவாறு
ஆட்டுக் குட்டியுடன்
திரும்பிச் செல்கிறேன்


நீ வராத மாலை நேரத்தில்
கூடு திரும்பும் மைனாக்களின்
பாடல்களையெல்லாம்
வயல்வெளியில் விட்டுவிட்டு
கதவுகளை மூடிக் கொள்கிறேன்

நீ வராத இருளில்
பதுங்கிக் கிடக்கும்
வலிகளைப் போக்கிடவென்று
தீபமொன்றை ஏற்ற முனைகிறேன்

நீ வராத வசந்த காலத்தில்
இலைகளும் பூக்களும் உதிர்ந்து
நிழல் வற்றிப் போன
என் மரத்தடியில் கிடந்து
முகங்கவிழ்ந்து விம்முகிறதொரு
நெடுங்கனவு

2010.08.17
(நன்றி: கல்குதிரை வேனிற்காலங்களின் இதழ் -2011 )