மலையேறியதன் வலி
கால்களைவிட்டு நீங்கிய
காலைப் பொழுதொன்றில்
மலையேறிய ஆடைகளைக்
கழுவத் தொடங்கியிருந்தேன்

வியர்வைபடிந்துபோன
அவ்வாடைகளைத் தொடும் வேளை
மறுபடியும்
கைகளில் தோய்ந்தது
கசந்து போனதொரு வேதனை

அன்று
மலையுச்சியையடைந்த வேளை
மெளனம்.
ஒரு நீள் கோட்டில்
தன்னைத் தொலைத்திருந்தது
பளபளக்கும் மாபெரும் கடல்

ஆகாயத்தின் கீழிலிருந்து ஆழிப்பரப்பு வரை
அளந்தளந்து அலைவதே
தம் ஜீவிதமெனப்
பறந்து கொண்டிருந்தன
அக் கடலின் பறவைகள்

காலங்காலமாய்க்
கடலைப் புறக்கணித்துத்
தானுயர்ந்து நிற்பதான
மலைமுகட்டில் நானிருந்தேன்

கல்லாய்ச் சமைந்த
மலையை இகழ்ந்தவாறு
ஆதியில் தொடங்கிய அதே திமிருடன்
உலகம் சுற்றிவரும்
கடலலைகளில்
நீ தரித்திருந்தாய்

தலைக்கு மேலே
எல்லா இரகசியமும் தாங்கி
ஓங்கி நின்றிருந்தது
கார் கொண்ட ககனம்

மலையிறங்கி வந்த பின்பும்
மலைநோக்கும் கணந்தோறும்
கால்களில் வந்து சேர்கிறது
நகரமுடியா ஒரு வலி

2010.08.22
(நன்றி: கல்குதிரை வேனிற்காலங்களின் இதழ் 2011)